ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை! இலவச அரிசி திட்டத்திற்கு வருகிறது ஆப்பு! எப்படி தெரியுமா?

சென்னை: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தொடர்ந்து 2வது முறையாக ,மத்தியில் ஆட்சியமைத்துள்ள பாஜக, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே அடையாள அட்டை, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்னும் அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகள் பலவும் தயக்கமின்றி ஆதரவு அளிக்கின்றனர்.. ஆனால், அப்பாவி மக்கள்தான் பாதிப்பை சந்திக்கப் போகிறார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு எனும்போது, உங்களின் ரேஷன் கார்டை வைத்துக் கொண்டு, இந்தியாவில் எங்கு சென்றாலும் ரேஷன் பொருள் வாங்க முடியும் என மத்திய அரசு சொல்கிறது. இந்த திட்டம் முழுதாக நடைமுறைக்கு வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அப்படி முழுமையாக நடைமுறைக்கு வரும்பட்சத்தில், தமிழகத்தைச்சேர்ந்த ஒருவர், ஆந்திரா, கர்நாடகா அல்லது டெல்லி சென்றால் இங்கு தருவதுபோலவே, இலவச அரிசி எதையும் வாங்கிட முடியாது. 

காரணம், இலவச அரிசி என்பது தமிழக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டமாகும். ஒரே ரேஷன் கார்டு, ஒரேநாடு எனும் திட்டத்தின்கீழ், மாநில அரசுகள் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்கள் எதுவும் பொருந்தாது. அப்போது, நாம் மானிய விலையில் காசு கொடுத்துத்தான் அரிசி வாங்க நேரிடும்.

இது உலக வர்த்தக நிறுவனத்தின் பேச்சைக் கேட்டு இந்தியா எடுத்துள்ள சிக்கலான நடவடிக்கை என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அடித்தட்டு மக்களை பாதிக்கக்கூடியதாக உள்ள இந்த திட்டம் பற்றி, மாநில அரசுகளுக்கே போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை இத்திட்டம் முழுவீச்சில் நடைமுறைக்கு வந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அச்சம் தெரிவிக்கப்படுகிறது.