கட்டிய மனைவி மீது ஆசிட் வீசிய மத்திய அரசு ஊழியர்! அதிர வைக்கும் காரணம்!

சென்னையில் கட்டிய மனைவி மீது ஆசிட் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை பெரம்பூா் தீட்டி தோட்டம் 6-வது குறுக்கு  தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர்கள்  பாத்திமா (வயது 29) சையது முகமது பாட்சா (வயது 40). இவா் ஆவடியில் உள்ள மத்திய அரசின் போர் தளவாடங்கள் ஆராய்ச்சி மையத்தில் பணி செய்து வருகிறார்.  கடந்த 2010 ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இவா்களுக்கு  2 குழந்தைகள் உள்ளனா்.

திருமணம் ஆனது முதல் தனது கணவா் தன்னை சந்தேகபட்டு வந்ததாக பாத்திமா அவரது வீட்டில் கூறி வருத்தபட்டுள்ளார். இதுகுறித்து அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது கணவா் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாக பாத்திமா பெரவள்ளுர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனா். அதை தொடா்ந்து சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பாட்சா தனது மனைவி மீது குளியறையில் இருந்த ஆசிட்டை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பாத்திமா அருகில் உள்ள பெரியார் நகா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு எழும்பூா் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திரு.வி.க நகா் போலீசார் வழக்கு பதிவு செய்து பாட்சாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.