அன்பிற்கும் அக்கறைக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கமல் ரூ.15ஆயிரம், டிடிவி ரூ.10ஆயிரம், ஸ்டாலின் ரூ.10ஆயிரம், எடப்பாடி ரூ.5ஆயிரம்..! கொரோனா பாதித்த செய்தியாளர்களுக்கு தாராளம் காட்டும் அரசியல் தலைவர்கள்!
கோவிட் -19 கொரோனோ நோய்த்தொற்றை தடுக்கும் பணியில் மருத்துவத்துறையினர், காவல்துறையினர், உள்ளாட்சிதுறையினர், தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலரும் முன்னணியில் களம் இறங்கி பணி செய்துவருகிறனர். இந்த நிலையில், பத்திரிகை - ஊடகத்துறையினர் மக்கள் சேவையில் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
களத்தில் கடுமையான பணிச்சூழலில் பணியாற்றிய காரணத்தினால் இன்று (06-05-2020) வரை சுமார் 50 ஊடகத்துறை நண்பர்கள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 10 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகை – ஊடக சகோதரர்களுக்கு சிறப்பான சிகிச்சையளித்த – அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரது சேவை பாராட்டுக்குரியது.
முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் 38 பேருக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் பணத்தை ரொக்கமாக வழங்கியுள்ளார் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
40 பேருக்கு அவரவர் வங்கி கணக்குகளில் தலா ரூபாய் 10 ஆயிரத்தை நன்மக்கள் நலசங்கமும், தலா 10 ஆயிரத்தை திராவிட முன்னேற்ற கழகமும், தலா 15 ஆயிரத்தை மக்கள் நீதி மையமும் செலுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யவும் முன்வந்துள்ளது பெரும் பாராட்டுக்குரியது.
காலத்தினால் செய்திருக்கும் இந்த உதவிக்கு மாண்புமிகு துணை முதல்வருக்கும், நன்மக்கள் நல சங்கத்தின் தலைவர் திருமிகு. டி.டி.வி தினகரன் அவர்களுக்கும், தி.மு.க தலைவர் திருமிகு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மக்கள் நீதி மைய தலைவர் திருமிகு. கமலஹாசன் அவர்களுக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது