காதலனுடன் ஏற்பட்ட மோதலில் கையை வெட்டிக் கொண்ட கல்லூரி மாணவி பலே நாடகம் நடத்தியுள்ளார்.
காதலனுடன் தகராறு! கையை வெட்டிக் கொண்ட கல்லூரி மாணவி! பெற்றோரை ஏமாற்ற போட்ட பலே நாடகம்!
சென்னை வியாசர்பாடி S A காலனியை சேர்ந்தவர் கீதா. 20 வயதான இவர் கொடுங்கையூர் முத்துக்குமாரசாமி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி முடிந்து SA காலனி எட்டாவது தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து வந்து அவரது செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
செல்போனை பறிக்க முடியாததால் ஆத்திரத்தில் கத்தியால் மாணவி கீதாவை சரமாரியாக வெட்டியதாகவும், இதில் காயமடைந்த கல்லூரி மாணவி கீதா எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள KM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரில் எம்கேபி நகர் போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனது நண்பருடன் ஏற்பட்ட தகராறில் தனக்கு தானே கத்தியால் கிழித்துக் கொண்டு பெற்றோருக்கு பயந்து வழிப்பறி நாடகம் அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்றதாக மாணவி கூறிய இடத்தில் போலீசார் சென்று பார்த்த போது அங்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதும் கீதா பொய் கூறியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.