ஆறே ஆறு மிஸ்டு கால்! தொழில் அதிபரின் ரூ.1.8 கோடி அபேஸ்! எப்படி தெரியுமா?

ஆறு மிஸ்டு கால் மட்டும் கொடுத்து பிரபல தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை நூதன முறையில் திருடியுள்ளனர்.


   மும்பையை சேர்ந்தவர் அமித் பார்கவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரியல் எஸ்டேட், நிதி தொடர்பான பல்வேறு தொழில்களை இவர் செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த டிசம்பர் 27ந் தேதி பிற்பகலில் லண்டனில் இருந்து ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அதனை பார்கவா பொருட்படுத்தவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து அதே எண்ணில் இருந்து மீண்டும் மிஸ்டு கால் வந்துள்ளது.

   இதனை தொடர்ந்து அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது பார்கவாவுக்கு லைன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து டிசம்பர் 28ந் தேதி அதிகாரை இரண்டு மணி வரை மேலும் நான்கு மிஸ்டு கால்கள் வேறு வேறு எண்ணில் இருந்து வந்துள்ளன. ஒரே நாளில் இத்தனை மிஸ்டு கால்கள் வந்ததால் சற்று சந்தேகம் அடைந்த பார்கவா, தனது எண்ணில் இருந்து தனது உதவியாளரை அழைத்துள்ளார்.

   ஆனால் பார்கவா செல்போன் வேலை செய்யவில்லை. இதனை தொடர்ந்து அவர் தன்னிடம் உள்ள மற்றொரு செல்போன் மூலம் சேவை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு சிம் கார்டை பிளாக் செய்யுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கையில் உங்கள் சிம் கார்ட் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக செல்போன் சேவை வழங்கும் நிறுவனம் கூறியுள்ளது.

   ஆனால் தான் தனது செல்போன் சிம் கார்டை பிளாக் செய்யுமாறு கேட்கவில்லை என்று கூறி வேறு ஒரு சிம்கார்டை வாங்கி பயன்படுத்தியுள்ளார் பார்கவா. மறுநாள் வங்கிக்கு சென்ற போது தான் தனக்கு முதல் ஏற்பட்ட விபரீதம் என்ன என்பது பார்கவாவுக்கு தெரியவந்தது. அதாவது பார்கவா வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒரே நாளில் எடுக்கப்பட்டுள்ளது.

   அதிலும் ஆன்லைன் மூலமாக 28 பரிவர்த்தனைகள் மூலமாக சுமார் 10 வங்கி கணக்குகளுக்கு பார்கவாவின் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பார்கவாவின் செல்போன் இயங்காத காரணத்தினால் அவருக்கு இது தொடர்பான எந்த எச்சரிக்கையும் வரவில்லை. அதாவது 6 மிஸ்டுகால்கள் கொடுத்து பார்கவாவின் செல்போனை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

  பின்னர் சிம் ஸ்வாப் எனும் முறையில் பார்கவாவின் எண்ணை ஆக்டிவேட் செய்து அவரது கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இந்தியாவில் இது போன்று ஸ்விம் ஸ்வாப் முறையில் பணம் திருடப்படுவது இது தான் முதல் முறை என்று மும்பை சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர். எனவே சந்தேகத்திற்கு இடமான எண்ணில் இருந்து மிஸ்டுகால் வந்தால் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.