அதிவேகத்தில் ஷேர் ஆட்டோ மீது பாய்ந்த தனியார் பஸ்! தர்கா சென்று திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

திருவள்ளூர் அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதியதில் இருவர் பலியாகினர் மற்றும் சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நூருல்லா கான் மற்றும் அன்வர் உட்பட ஏழு பேர் பெங்களூரில் இருந்து திருவள்ளூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரம் அருகில் இருக்கும் தர்காவிற்கு வந்துள்ளனர். 

வேலையை முடித்துக் கொண்டு பெங்களூரு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் கடம்பத்தூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருக்கையில், தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக வந்த பேருந்து ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ கடுமையாக நசுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நூருல்லா கான் மற்றும் அன்வர் இருவரும் உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பத்தூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பஸ் ஓட்டுநர் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.