ஒரு காலத்தில் மதன் கார்ட்டூன் போட்டால், அதை நான்கு நாட்கள் நாக்கு குழற பேசி பாராட்டுவார்கள் வாசகர்கள். விகடனில் இருந்து அவர் விரட்டப்பட்டதும், அவர் கார்ட்டூனை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கார்ட்டூன் மூலம் மதன் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
அறிவாளி, புத்திசாலி மதன் இப்படி செய்யலாமா? கொந்தளிக்கும் நீட் எதிர்ப்பாளர்கள்!

ஆனால், இப்போது அவர் வில்லங்க மதன் ஆகியிருக்கிறார் என்பதுதான் விஷயம். நீட் தேர்வு விவகாரத்தில் அனிதாவில் இருந்து ரித்துஸ்ரீ வரையிலும் இதுவரையிலும் எத்தனையோ பெண் பிள்ளைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். என்னதான் நீட் வேண்டும் என்று போராடுபவர்களாக இருந்தாலும், இந்த தற்கொலையை நினைத்து வருந்துவதுதான் தமிழனின் குணம்.
ஆனால், இன்று தினமணி நாளிதழில் மதன் போட்டிருக்கும் ஒரு கார்ட்டூன், கசாப்புக்கடைக்காரனை நினைவுக்குக் கொண்டுவருகிறது என்பதுதான் வேதனை. ஒரு மாணவன் கையில் தூக்குக்கயிறை மறைத்துக்கொண்டு நிற்க, அந்த மாணவரைப் பார்த்து, என்னப்பா நீட் தேர்வு எழுதப்போறியா என்று கேட்பது போன்று கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.
ஏழைகளின் 10% இடங்களைப் பிடுங்கிக்கொண்ட பிறகும் இவர்களுக்கு ரத்தப் பசி தீரவில்லை என்பதுதான் வேதனை. இந்த முறை நீட் தேர்வில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவன் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளான் எனும் நிலையில், அது உண்மையில் தூக்குக் கயிறுதான். ஆனால், அதை மாணவன் கையில் கொடுக்கத்தான் வேண்டுமா, உண்மையில் நீட்டைத்தான் பறிக்க வேண்டும். வயிற்றுக்கு சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காக மதன் தூரிகை இத்தனை கேவலமாக கார்ட்டூன் வரையவேண்டுமா என்பதுதான் நம் கேள்வி.