பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்! ஏன்னு தெரியுமா?

போலியாக பலாத்கார மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் ரூ.25 லட்சம் அபராதம் விதித்துள்ளது.


ஹரியானாவைச் சேர்ந்தவர் நேஹா காந்திர். தொழில்முனைவோராக உள்ள இவர், தனது கணவருடன் சேர்ந்து ஃபீல் குட் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம், மும்பையை சேர்ந்த சாபட் அண்ட் கம்பெனியின் வர்த்தக முத்திரையை முறைகேடான முறையில் பயன்படுத்துவதாக, புகார் கிளம்பியது.

 

அதாவது, சாபட் அண்ட் கம்பெனி விற்று வந்த இருமல் மருந்தில் உள்ள வர்த்தக முத்திரையை எடுத்து, நேஹா காந்திருக்குச் சொந்தமான நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளது. இதன்பேரில், சாபட் அண்ட் கம்பெனி உரிமை மீறல் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விசாரணையில், மும்பை உயர்நீதிமன்றம், பிரதிநிதி ஒருவரை நியமித்து, நேஹாவின் தொழிற்சாலையில் உள்ள சரக்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

 

இதன்படி, நீதிமன்ற பிரதிநிதி அங்கு சென்று, பொருட்களை பறிமுதல் செய்தபோது, நேஹா காந்திர் அவரை வெளியேறும்படி மிரட்டியுள்ளார். அத்துடன், பலர் முன்னிலையில், ’’வெளியே போகாவிட்டால், பொய்யான பலாத்கார வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,’’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

 

இதனை, நீதிமன்ற பிரதிநிதி ஃபோனில் வீடியோ எடுத்தும் உள்ளார். அதன்பின், பறிமுதல் செய்த சரக்குகளை டெம்போவில் அவர் ஏற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரது ஃபோனை பிடுங்க முயன்ற நேஹா காந்திர், அவரை தரக்குறைவாகவும் பேசியுள்ளார். 

 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர், இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனை உறுதி செய்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, ‘’இதுபோன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் பெயரில், பெண்களுக்கு தரப்படும் உரிமை, பாதுகாப்பை முறைகேடாக பயன்படுத்த முயன்றது மிகவும் தவறு. இது சட்டத்தை களங்கப்படுத்திய செயலாகும். போலியாக பலாத்கார மிரட்டல் விடுத்ததை நியாயப்படுத்த முயற்சிப்பதையும் ஏற்க முடியாது. நேஹாவுக்கும், அவரது கணவருக்கும் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது,’’ என்று உத்தரவிட்டார். 

 

இதன்போது, நேஹாவின் வழக்கறிஞர், ‘’உணர்ச்சிவசப்பட்டு, ஆற்றாமை காரணமாக அத்தகைய வார்த்தையை எனது கட்சிக்காரர் பயன்படுத்தினார். அவர் 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண் என்பவதை கவனத்தில்கொண்டு, மன்னிக்க வேண்டும்,’’ என்று வாதிட்டார். ஆனால், அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். 

 

இந்த சம்பவம், எதற்கெடுத்தாலும் பொய்யாக பலாத்கார மிரட்டல் விடுக்கும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.