வைரமுத்துக்கு கருப்புக்கொடியா? இந்துக்களின் ஆண்டாளை அவமானப்படுத்திட்டாராம்!

எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்களை வைரமுத்து கொடுத்திருந்தாலும், இன்றைய அவரது அடையாளமாக ஆண்டாளும், பாடகி சின்மயி சீண்டல் விவகாரமும்தான் இருக்கிறது.


இந்த நிலையில் வைரமுத்துக்கு எஸ்.ஆர்.எம். கல்லூரியில் டாக்டர் பட்டம் கொடுக்க இருக்கும் விவகாரம் வில்லங்கமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய ராணுவ அமைச்சர் ராம்நாத்சிங் வருவதாக ஒப்புக்கொண்டு, இன்விடேஷனும் அடிக்கப்பட்டது. ஆனால், வைரமுத்துவின் மீது வன்மம் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். புள்ளிகள், அவர் வரக்கூடாது என்று பல்வேறு உள்ளடி வேலைகள் செய்து நிறுத்திவிட்டனர்.

ஆனாலும், திட்டமிட்டபடி டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடக்க இருப்பதால், அப்போது வைரமுத்துக்கு கருப்புக்கொடி காட்டி அவமானப்படுத்த இந்து முன்னணியினர் முன்வந்திருக்கிறார்கள். அதன்படி, நாளை சனிக்கிழமை காலை, காட்டாங்களத்தூர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இந்து சமயத்தை, சமயச் சான்றோர்களைக் கேவலப்படுத்திய வைரமுத்து அவர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்படும் பட்டமளிப்பு நிகழ்ச்சியை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்துக்களின் உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிப்படுத்தும் விதத்தில், கருப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்திட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இதில் ஆன்மிக அமைப்புகளும், மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்துகொள்வார்கள் என்று கேட்டுள்ளனர்.