பா.ஜ.க.வின் வீடியோ லீலை... கர்நாடகாவில் ஆட்சி கவிழுமா.?

கர்நாடக மாநிலத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் + ஜனதாதளம் அரசுக்கு பா.ஜ.க.வினர் குழி தோண்டிப் புதைத்தனர். அதற்கு மத்திய அரசு பெரிய அளவுக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


அது, உண்மை என்று சொல்லும் அளவுக்கு இப்போது ஆடியோ வெளியாகி கர்நாடகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் அதிரவைத்துள்ளது. 

பா.ஜ.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசிய வீடியோ காட்சி வெளியானது.

நடந்தது இதுதான். அதாவது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தில் இருந்து வெளியே வந்த 17 எம்.எல்.ஏ.க்கள் காரணமாகத்தான் கர்நாடகாவில் புதிய ஆட்சி உதயமானது. ஆனால், அந்த 17 பேரையும் அதோடு மறந்துபோனது பா.ஜ.க. இதுகுறித்து எடியூரப்பா பேசிய விவகாரம்தான் வைரலாகி வருகிறது.

கடந்த 27ம் தேதி நடந்த கர்நாடக பாஜகவின் உயர் நிலைக்குழு கூட்டத்தில், எடியூரப்பா பேசுகையில், ‘‘நமக்கு உதவி செய்த 17 எம்எல்ஏக்களும் கட்சி எதிர்ப்பையும் மீறி, குடும்பத்தை விட்டு மும்பையில் மாதக்கணக்கில் தங்கி இருந்தார்கள். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேரடியாக இந்த விவகாரத்தை கையாண்டார். நமது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அந்த 17 பேருக்கும் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த எம்எல்ஏக்களை இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து, உரிய கவுரவம் அளிக்க வேண்டும்'’’ என பேசி இருந்தார்.

இந்த ஆடியோதான் வெளியாகி இருக்கிறது. நேரடியாக அமித் ஷாவே இந்த விஷயத்தை கையாண்டார் என்பதுதான் இந்திய அளவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேசிய எடியூரப்பா மீது பா.ஜ.க.வும் அதிருப்தியாக உள்ளது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் மட்டும் ஜனதா தளத்தினர், ‘‘பா.ஜ.க.வினர் அப்பட்டமான ஜனநாயக படுகொலை செய்திருப்பது உறுதியாகத் தெரிகிறது. அதனால், உடனடியாக எடியூரப்பா தலைமையிலான அரசை கலைக்கவேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.