மோடி அரசின் சட்டத்தை எதிர்த்து புதிய சட்டம் இயற்றும் பா.ஜ.க. மாநில அரசுகள்! வாகன போக்குவரத்து சட்டத்தில்திடுக் திருப்பம்!

மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி புதிய விதிமுறைகளை கொண்டுவந்து இருக்கிறது மத்திய அரசு.


அதன்படி ஸ்கூட்டிக்கு 23 ஆயிரம்,லாரிக்கு 141000 என்றெல்லாம் அதி பயங்கர ஃபைன்களை விதிக்கிறது காவல் துறை.இதற்கு இந்தியா முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதை புரிந்து கொண்ட மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு இண்டர்வியூவில் மாநில அரசுகள் விரும்பினால் கட்டணங்களை குறைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கோடி காட்டினார்.

அதை முதலில் கப்பென்று பிடித்துக்கொண்டு கட்டணக் குறைப்பை அமல் படுத்த தொடங்கிய முதல் மாநிலமே பிஜேபி ஆளும் குஜராத்தான்.அதைத்தொடர்ந்து உத்திரகாண்ட் மாநிலமும் பெரும்பால கட்டணங்களை பாதியாக குறைத்து விட்டது.கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் மந்திரிசபையைக் கூட்டி விவாதித்து விட்டு தாங்களும் கட்டணங்களை குறைக்கப் போவதாக அறிவித்து விட்டார்.

உத்திரபிரதேச மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கட்டாரியா பேசுகையில் பொதுமக்கள் நலன் கருதி விதிமீறல் அபராதங்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்.அதை எப்படி செய்வது என்று ஆலோசித்து வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இவை அனைத்துமே பிஜேபி ஆளும் மாநிலங்கள்.

இவற்றை தொடர்ந்து இடதுசாரிகள் ஆளும் கேரள அரசும் இதே முடிவுக்கு வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து கேரளத்தில் விதிமீறல் அபராதங்கள் வசூலிக்கப் படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து வரும் 16ம் தேதி கேரள அரசு இறுதி முடிவு செய்ய இருப்பதாக தெரிகிறது. ஆனால்,மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக அதிக வாகனங்கள் ஓடும் தமிழகத்தில் அரசு இந்த விசயத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.