இந்த நாடு, அயோத்தி கோயில், சுப்ரீம் கோர்ட் எல்லாமே எங்களுடையதுதான்! பி.ஜே.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அயோத்தி ராமர் கோவில் நிலம் தொடர்பான வழக்கின் 22 வது நாள் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.


அதில்,இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக வாதிடும் மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் இப்போது இந்த வழக்கில் தான் ஆஜராவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வின் முன்னால் தனக்கு வந்த மிரட்டல்கள் பற்றியும் , தனது உதவியாளர் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே தாக்கப்பட்டதையும் தெரிவித்தார்.

அதோடு உத்திரப்பிரதேச மாநில கூட்டுறவுதுறை அமைச்சர் முகுத் பிஹாரி வர்மா ' ராமர் கோவில் எங்கள் இலக்கு,அதை கட்டியே தீருவோம்.கோவில்,இந்த நாடு,சுப்ரீம் கோர்ட் எல்லாம் எங்களுடையதுதான்' என்று பேடியதைச் சுட்டிக்காட்டிய ராஜிவ் தவான் ,இதற்காகத் தான் அமைச்சர் முகுத் பிஹாரி மீது நீதிபதி அவமதிப்பு வழக்குத் தொடரப்போவது இல்லை என்றும் தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் , ராஜிவ் தவானுக்கு பாதுகாப்பு தேவைப் படுகிறதா என்று கேட்டனர். அதை மறுத்த ராஜிவ் தவான்,தான் ஒரு போதும்.இந்து மதத்துக்கு எதிராக வாதம் செய்யவில்லை என்றார்.அதோடு காமாக்யா ஆலயம்,காசி.விஸ்வநாதர் ஆலயம் போன்ற இந்து வழிபாட்டுத் தலங்களுக்காகவும் தான் கடந்த காலங்களில் வாதிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

கடைசியாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,உச்சநீதிமன்றம் எங்களுடையது என்று சொன்ன உத்திரப்பிரதேச அமைச்சர் முகுத் பிஹாரி வர்மாவுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக கூறயுள்ளனர்.யோகி ஆதித்யநாத்தின் அமைச்சர் முகுத் பிஹாரியோ,வழக்கமான இந்திய அரசியல்வாதிகளின் பாணியில் தான் அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.