இதயத்தை நொறுக்கும் புகைப்படம்! இரை கிடைக்காமல் குஞ்சுக்கு சிகரெட்டை புகட்டும் தாய் பறவை!

ஃபுளோரிடா: தாய்ப்பறவை ஒன்று தனது குஞ்சுக்கு, சிகரெட் துண்டை இரையாகக் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த காட்சி ஃபுளோரிடா பகுதியில் உள்ள கடற்கரையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை படம்பிடித்தவரின் பெயர் கரென் மேசன் ஆவார். வழக்கம்போல, கடற்கரைக்குச் சென்ற அவர், அங்கே யதேச்சையாக நிகழ்ந்த இந்த சம்பவத்தை கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி அதனை புகைப்படமாகவும் எடுத்துள்ளார்.

இதனை ஃபேஸ்புக்கில் #KarenCatbird என்ற ஐடியில் பதிவிட்டுள்ள அவர், ''யதேச்சையாக இந்த காட்சியை காண நேரிட்டது. அது உணவு இல்லை, சிகரெட் துண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் இதனை  சம்பந்தப்பட்ட பறவைகளிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, சிகரெட் பிடித்ததும் அதன் மிச்சத்தை கீழே வீசாமல் தகுந்த குப்பைத்தொட்டியில் சேகரிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பீச்சிற்கு செல்வோர் இதை பின்பற்ற வேண்டும், என்றும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது, மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நாம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் சேரும் குப்பைகளில், சிகரெட் துண்டுகள் முக்கியமான ஒன்றாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.