பெண்களின் ரட்சகர், அத்வானியை தூக்கி சிறையில் போட்டவர், பீகார் நாயகன் லாலுபிரசாத் வரலாறு படிச்சாச்சா?

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுல்ள ஒரு குக்கிராமமான புல்வாரியாவில் ஆறு சகோதரர்களோடும் ஒரு சகோதரியோடும் லல்லு பிறந்தார்.


1948 ஜூன் பதினொன்று என்று சான்றிதழ்கள் சொன்னாலும் கல்வி பெறாத தன் தாய் சொல்லும் பிறந்த தேதியில் சந்தேகம் இருக்கிறது என்கிறார். .ராமநவமியும் மொகரமும் பாகுபாடற்றுக் கொண்டாடப்படும் அக்கிராமத்தில் மரமேறி மாங்காய் பறிப்பது, குட்டையில் குதித்து நீந்துவது, எருமை மாடுகளின் மீது சவாரி செல்வது, .

பிடுங்கிய கரும்பை சுவைத்தபடி வீடு வந்து சேருவது இதுதான் லல்லுவின் அலப்பரையான ஆரம்பப் பள்ளிக் காலங்கள். அலப்பரையின் உச்சமாக ஊருக்கு வந்த பெருங்காய வியாபாரி மூட்டையை கிணற்று மேட்டில் வைத்துவிட்டு துண்டை உதறுவதற்குள் கிணற்றுக்குள் குப்புறப் பாய்கிறது மூட்டை. உபயம், லல்லூ பிரசாத். அந்த வியாபாரியின் அலறல் கேட்டு மொத்த கிராமுமே திரண்டு வருகிறது.

‘அட. உதவிக்கு இவ்வளவு பேரா?’ என அந்த வியாபாரி வியக்கும்முன்னே கையில் வைத்திருக்கும் குடங்களோடு கிணற்றை நோக்கிப் பாய்கிறது மொத்த கூட்டமும். பின்னே, நேற்றுவரை சாதாரணக் கிணறாக இருந்த அந்தக் கிணறு. பெருங்காயக் கிணறாக பரிணாமம் பெற்றால் சும்மா இருப்பார்களா மக்கள்? 

.அப்புறமென்ன அந்தக் கிராமம் முழுக்கவே பெருங்காய சமையலும் பெருங்காய மணமும்தான். இனி இவனை இங்கு வைத்துக் கொண்டிருந்தால் உருப்பட மாட்டான் என்று முடிவெடுத்த லல்லுவின் தாய் பாட்னா கால்நடைக் கல்லூரியில் தினக்கூலியாகப் பணியாற்றும் தனது மற்றொரு மகன் முகுந்த் ராயிடம் அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார். 

அக்கிராமத்துக் குட்டைகளையும், குளங்களையும், பறவைகளையும், நண்பர்களையும் பிரிய முடியாத லல்லுவின் கதறல் தாயின் செவிகளில் ஏறுவதேயில்லை. முடிவு ? பாட்னாவிலுள்ள பள்ளியை நோக்கிய பயணம். 66 பைசா தினக்கூலி வாங்கும் அண்ணனால் இரண்டு சட்டையும் ஒரு டிராயரும் மட்டுமே வாங்கித்தர இயலுகிறது. 

தனது கிராமத்துக் கதைகள், மிமிக்ரி என வெளுத்துக்கட்டும் லாலு அரசு நடுநிலைப் பள்ளியின் கிளாஸ் லீடர். அண்ணனுக்கு உதவியாக சமைத்துத் தருதல் பாத்திரங்கள் கழுவுதல் என நகரும் நாட்கள் கல்லூரிக் காலத்தைத் தொடுகிறது. 

பாட்னா பல்கலைக் கழகத்தின் கல்லூரியில் காலெடுத்து வைக்கிறார் லாலு. கல்லூரியில் சேர்ந்தாலும் இரண்டு வேளை உணவோ, நாகரீக உடையோ அண்ணன்களால் வாங்கித்தர இயலுவதில்லை. வசதிபடைத்த உயர்ஜாதியினர் மோட்டார் சைக்கிள்களில் கல்லூரிக்கு வர 10 கிலோமீட்டர் நடைதான் லாலுவைப் போன்ற ஏழை ஜாதிகளுக்கு. அங்குதான் ஆரம்பிக்கிறது லாலுவின் முதல் சமூகப்பணி.

ஒருநாள் சட்டென்று கல்லூரியின் பிரதான வாசலின் முன்பாக நடுவில் நின்றபடி உரத்த குரலில் பேசத் தொடங்குகிறார் “நாங்கள் ஏழைகள்தான். ஆனால் படிக்க ஆசைப்படுபவர்கள். 

பசியும் களைப்பும் மேலிட 10 கிலோமீட்டர் நடந்தே வந்தால் எங்களுக்குள் எப்படிப் படிப்பு ஏறும்? காலையில் கல்லூரியில் கால் வைத்ததில் இருந்து மாலைவரை பசிக்கு ஏதேனும் சிறுதீனி தின்னலாம் என்றால் அதற்கு பாக்கெட்மணி கொடுத்து அனுப்ப எங்கள் வீடுகளில் வசதியும் கிடையாது.

கல்லூரி முடிந்தாலோ மீண்டும் வீடு நோக்கி அதே 10 கிலோமீட்டர் நடை. உடனடியாக கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று முழங்க, துணைக்கு மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்துசேர்கிறார்கள்.

லாலுவின் பேச்சையும் பேச்சின் வீச்சையும் கண்ட பல்கலைக் கழக நிர்வாகம் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு பேருந்துவிடச் சம்மதிக்கிறது. போதாக்குறைக்கு கல்லூரிப் பெண்களை கேலி செய்பவர்கள், விடாமல் துரத்துபவர்கள், ரோட்டோர ரோமியோக்கள்,  

என எல்லோருக்கும் லாலு என்றால் சிம்ம சொப்பனம்தான். பெண்கள் தேடிவந்து புகார் செய்வார்கள் லாலுவிடம். அதற்காக கேலி செய்யும் மாணவர்களை போலீசிடம் பிடித்துத் தருவது கல்லூரி நிர்வாகத்திடம் போட்டுத் தருவது என்றெல்லாம் போக மாட்டார் லாலு. 

அவருக்கே ‘உரித்தான’ பாணியில் பாடம் எடுத்து மாற்றிக்காட்டுவார். பெண்கள் மத்தியில் லாலுதான் ஹீரோ. அவர் கல்லூரியில் மட்டுமில்லை அதைத்தாண்டி பாட்னா பெண்கள் கல்லூரிக்கும் சார்தான் அத்தாரிட்டி. அக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே ஆண் லாலுதான்.

இந்த வேளையில்தான் ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார் லாலு. நிலப்பிரபுக்களின் மையமான பீகாரில் பெரும்பாலான நிலமும் கல்வியும் அரசியலும் அதிகாரமும் உயர்ஜாதியினர் கைகளில் மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தது. தனது சோசலிச தத்துவத்தை சோதித்துப் பார்க்கும் சோதனைக் களமாக லோகியா பீகாரில் களமிறங்க லாலுவின் கவனமும் அவரது சோசலிஸ்ட் கட்சியை நோக்கித் திரும்புகிறது.

பிற்பாடு பாட்னா பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவரானதோ, கல்லூரி தேர்தலில் அமைச்சரின் மகனையே மண்ணைக் கவ்வ வைத்ததோ, வழக்கம்போல மாணவிகளின் நூறு சதவீத ஓட்டும் லாலுவிற்கே விழுந்ததோ, பீகாரின் தலைநகரே வியந்த விஷயங்கள்.

லோகியாவிற்குப் பிற்பாடு ஜெ.பி என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களது முழுப்புரட்சி அறைகூவலை ஏற்று மாணவர் போராட்டத்திற்கான அமைப்பாளர் ஆகிறார். 

இதில் முக்கியமானது 18.3.1974 இல் நடந்த பீகார் சட்டசபை முற்றுகைப் போராட்டம்தான். ஜெ.பி.யின் ஆணைப்படி தொடங்கிய இப்போராட்டத்தை கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு என சகல வழிகளிலும் ஒடுக்கப் பார்க்கிறது போலீஸ். துப்பாக்கிச்சூட்டில் லாலு கொல்லப்பட்டுவிட்டார் என்கிற புரளி கிளம்ப கொந்தளிக்கிறது பீகாரே. 

பிற்பாடு இந்திராகாந்தி கொண்டு வந்த மிசா சட்டத்தில் லாலு கைது செய்யப்படுவது, 1974 ஜுன் 25 ஆம் நாள் நாட்டையே இருளில் தள்ளிய எமர்ஜென்ஸி அறிவிக்கப்படுவதும், நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும், கருத்தடை என்கிற பெயரில் இந்திராவின் உத்தமபுத்திரன் சஞ்சய்காந்தி திருமணமே ஆகாத இளைஞர்களை கொத்துக் கொத்தாக தூக்கிப்போய் கட்டாயக் கருத்தடை செய்து அனுப்பப்படுவதும் என நடந்தேறியவை அனைத்தும் இப்பன்றித் தொழுவ ஜனநாயகம் பல்லிளித்த காலங்கள்.

இந்திரா அறிவித்த அவசரநிலை பிரகடனம் வாபஸ் வாங்கப்பட்டதும், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், சிறைக்குள்ளிருந்தபடியே லாலு வக்கீலுக்கான படிப்பில் பாஸானதும், சிறைக்குள் இருந்தபடியே எம்.பி. தேர்தலில் போட்டிபோட்டதும், சிறைக்குள் இருந்தபடியே 3.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் வரலாற்றில் கண்ட செய்திகள்தான். 

ஆனால் இவையனைத்தும் நிறைவேறும்போது லாலுவுக்கு வயது வெறும் 29. ஆம், இந்தியாவிலேயே அன்று இந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானது லாலு பிரசாத் மட்டும்தான்.ஆனால் இதில் கல்லூரிக் காலம் தொடங்கி ஜெ.பி.யுடன் இருந்த காலம் வரை லாலுவுக்கு எதிராக கோள் மூட்டுவதிலும், ஏழரையைக் கூட்டுவதிலும் கவனமாக இருந்தது ஆர்.எஸ்.எஸும் அதனது மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும் தான். அது இன்று வரையிலும் தொடர்கிறது என்பது வேறு விஷயம். 

.ஆர்.எஸ்.எஸுக்கும் பி.ஜே.பி.க்கும் பேரைக்கேட்டால் தூக்கத்தில்கூட மூச்சா போய்விடக் கூடிய அளவுக்கு கிலி கொடுக்கும் புலியாக இருந்தவர்தான் லாலு பிரசாத். அதற்கு உதாரணமாக ஒன்றே ஒன்றைச் சொல்லி விடைபெறுவது உத்தமமானது என்று நினைக்கிறேன். அதுதான், எல்.கே.அத்வானியின் கைது.

வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்காக வந்த மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த உத்தரவிட்டதும் அதைத் தாங்க முடியாமல் ரத்த யாத்திரையைத் அறிவித்ததும் அதற்கு அத்வானி தலைமை வகித்து நகரம் நகரமாய் வந்து ரணகளப்படுத்தியதும் ஊர் அறிந்த செய்திகள். பாட்னா பொதுக்கூட்டம் ஒன்றில் லாலு அறிவிக்கிறார். .

”நேற்று இரவு என் கனவில் ராமர் வந்தார். என்னிடம் ’லாலு, என் பேரைச் சொல்லிக் கொண்டு ஒரு டுபாக்கூர் ரதயாத்திரை வருகிறது, அதைப் போய் தடுத்து நிறுத்தி ஆளைத் தூக்கி உள்ளே போடு’ என்றார். பீகார் எல்லைக்குள் கால் வைத்தால் நிச்சயம் கைதுதான்” என்கிறார் லாலு பிரசாத்.

ரதயாத்திரை வரும்போது மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் பயத்தில் மௌனம் காக்கிறார்கள். வழியெங்கும் கலவரம். பீகாரை நெருங்குகிறது ரதயாத்திரை. மத்திய அமைச்சர் முப்தி முகமது சையத் முதலமைச்சர் லாலுபிரசாத்தின் போன் லைனுக்கு வருகிறார். “ரத யாத்திரையைத் தடுக்க வேண்டாம். அப்படியே போக விட்டுவிடுங்கள்’’ என்கிறார். 

”நீங்கள் அதிகாரத்தில் மயங்கிவிட்டீர்கள்’’ என்றபடி போனை வைக்கிறார் லாலு. ரதம் நெருங்குகிறது. முதலில் சசராம் என்கிற இடத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்வதாகத் திட்டம். தன் படுக்கை அறையில் அரசின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை. கைதானால் கொண்டு வர ஹெலிகாப்டர் எல்லாம் ரெடி.

ஆனால், ரகசியமாகப் பேசப்பட்ட விஷயம் வெளியில் கசிகிறது. ரூட்டை மாற்றுகிறார் அத்வானி. அடுத்ததாக தன்பாத் என்கிற இடத்தில் தடுத்து நிறுத்த முடிவெடுக்கிறார்கள். இந்தத் திட்டமும் லீக்காகிறது. மீண்டும் ரூட்டை மாற்றுகிறார் அத்வானி.

அதனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.கே.சிங்கை வரச்சொல்லி ஆணைபிறப்பிக்கிறார் லாலு. அடுத்து டி.ஐ.ஜி ராமேஷ்வருக்கு அழைப்பு. இவர்களோடு ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு தலைமைச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளை அழைத்து சமஸ்டிபூரில் அத்வானியைக் கைது செய்யும் திட்டத்தை விவரிக்கிறார். 

.இந்தமுறை ரகசியம் கசியாமல் இருக்க தனது இல்லத்தில் உள்ள எல்லா தொலைபேசி இணைப்புகளையும் துண்டிக்கச் சொல்லிவிட்டு வந்தவர்களை வெளியேவிடாமல் மூலையில் போய் குத்த வெச்சு உட்காரச் சொல்லுகிறார் லாலு. அதன்பிறகு எப்படியெல்லாம் திட்டம் போட்டு கைது செய்தார் என்பதுதான் பரபர திருப்பம்.

அரசு நிலத்தில் அமைந்திருந்த கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர் பாட்னா கோல்ப் மைதானத்தை கைப்பற்றி மிருகங்கள் சுதந்திரமாக உலவட்டும் என அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தது, பணக்காரர்கள் குடிக்கவும் கும்மாளமிடவுமாய் இருந்த பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீதம் கையகப்படுத்தி...

அதில் இனி ஏழை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் உட்பட சகலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கிறார். இதுபோன்று ஆயிரத்தெட்டு நிகழ்வுகள். அதனால்தான் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் லல்லு..!