ஆன்லைன் போராளிகளே ஜாக்கிரதை! உங்களை மிரட்ட வருகிறது தேசிய புலனாய்வுக் குழு!

தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ. எனப்படும் நேஷனல் இன்வெஷ்டிகேசன் ஏஜென்சிக்கு இப்போது கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே இந்த அமைப்பு மூலமாகத்தான் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும், தேசிய இன உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களும் மிரட்டி அடக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்த அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இனி, ஆன்லைன் குற்றங்களாக கருதப்படுபவற்றையும் என்.ஐ.ஏ. விசாரிக்க முடியும் என்பதுதான் அதிர்ச்சிகரமாக தகவல்.

இதனால் பேஸ்புக் பதிவுகள், யூ டியூப் வீடியோக்கள், ட்விட்டர் போன்ற பொது தளங்களில் தங்கள் கருத்துக்களை கூறுபவர்களையும் விசாரிக்க முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் எந்த ஒரு மாநிலத்தின் உள்ளே சென்று விசாரிப்பதற்கும், சொத்துக்களை முடக்குவதற்கும், வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடவடிக்கை நடத்துவதற்கும் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். 

இதன் மூலம் மாநில அரசின் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது அரசியல் எதிரிகளாக கருதுபவர்களை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே எந்த மாநிலத்தின் உள்ளேயும் புகுந்து கைது செய்ய முடியும். மேலும் இந்த சட்டத்தில் கொண்டு வரப்படுகிற திருத்தத்தின்படி தனிநபர்களையும் "பயங்கரவாதிகள்" என்று இந்த அரசு வரையறுக்கலாம். இதுவரை அமைப்புகளைத் தான் பயங்கரவாத அமைப்புகள் என்று வரையறை செய்து தடை செய்யும் வழிமுறை இருந்தது. அந்த வழிமுறையிலேயே பல்வேறு உரிமை பேசும் அமைப்புகள் தடை செய்யப்பட்டன.

தற்போது தனிநபர்களை பயங்கரவாதிகளாக வரையறுக்கலாம் என்பதன் மூலமாக ஆன்லைன் பதிவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என எந்தவொரு தனிநபரையும் பயங்கரவாதிகள் என்று வரையறை செய்து பல ஆண்டுகள் சிறையில் வைத்து ஒடுக்க முடியும்.
இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய எதிர்ப்பில்லாமல், சிறிய சலசலப்புகளுடன் நிறைவேறியிருப்பது எதிர்க்கட்சிகள் எத்தனை மோசமான தன்மையானதாக அல்லது பொறுப்பற்றதாக இருக்கின்றன என்பதையே காட்டுகிறது. இனிமேல், கொஞ்சம் உஷாராவே பதிவு போடுங்க போராளீஸ்....