நீலகிரி மாவட்டத்தில் எலி கடித்ததால் சுகாதாரமற்ற முறையில் இருந்த மாட்டிறைச்சிகளை விற்பனைக்கு முன்னதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எலி சாப்பிட்டு மிச்சம் வைச்ச மாட்டுக்கறிதான் விற்பனைக்கு வருதாமே..? நீலகிரி அதிர்ச்சி

நீலகிரி குன்னூர் பகுதியில் உள்ள தினசரி சந்தையில் ஆடு, கோழி, மாடு மற்றும் பல இறைச்சிகள் விற்பனை செய்வது வழக்கம்.
சமீபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சிகளை எலி கடிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் பொதுமக்களிடையே சுகாதாரமான இறைச்சியைத்தான் வாங்கி சாப்பிடுகிறோமா என்ற அச்சம் நிலவியது.
பின்னர் தகவல் அறிந்து சென்ற நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்க விக்னேஷ், குன்னூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுநந்தன் மற்றும் அதிகாரிகள் குன்னூரில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் சோதனை செய்தனர். அங்குள்ள கடைகளில் எலிகள் சுற்றித் திரிவதையும் எலிகள் சில மாட்டிறைச்சிகளை கடிப்பதையும் நேரடியாகவே பார்த்ததை கண்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதிகாரிகள் அந்த கடைகளில் சுகாதரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 700 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். இறைச்சிகளை குன்னூர் ஓட்டுப்பட்டறையில் குப்பை கிடங்கு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்றவர்களிடம் இனி இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் இறைச்சி விற்பனை நடைபெறுவது தெரியவந்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் என்பது அங்குள்ள மக்கள் வசிப்பதற்கான இடம் மட்டும் அல்ல. நாள்தோறும் நாடு முழுவதிலிரும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவியும் இடம். சைவம் முதல் அசைவம் வரை குன்னூர், உதகை, மேட்டுப்பாளையம் என ஏராளமான ஓட்டல்களில் தரும் உணவைத்தான் எந்த கேள்வியும் கேட்காமல் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் ஊட்டி, குன்னூரில் உள்ள வியாபாரிகளை நம்பித்தான் ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை வாங்கி சுற்றுலாப் பயணிகளுக்கு சமைக்கின்றனர். எனவே அங்குள்ள வியாபாரிகள் லாபத்தை மட்டுமே மனதில் கொள்ளாமல் அங்குள்ள மக்களின் உடல்நிலையையும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்துடனும் இறைச்சிகளை விற்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.