கர்நாடகாவில் மாட்டிறைச்சிக்கு தடை ? எடியூரப்பா ஆலோசனை!

ஒரு வழியாக மூன்று துணை முதல்வர்களுடன் தனது நாற்காலியை உறுதிப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா.


அதைத் தொடர்ந்து 2010 விட்ட இடத்திலிருந்து பீஃப் விவகாரத்தை துவங்குவார் என்று தெரிகிறது.கர்நாடக பசுப்பாதுகாப்பு பிரிவு தலைவர் சித்தார்த் கோயங்கா தலைமையில் வந்த ஒரு குழு முதல்வர் எடியூரப்பாவிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் பசுக்களை கொல்வதையும்,மாட்டிறைச்சி விற்பதையும் தடை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளது.இதுபோலவே விஜய்புரா சட்டமன்ற உறுப்பினர் பசவன கவுடா பாட்டீல்,பசுப்பாதுகாப்புக்கு தனிச்சட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.

இதையடுத்து,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தி இருக்கிறார்.இதற்கு முன்பே 2010ல் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது இது போல ஒரு தடைச்சட்டம் கொண்டுவந்து இரு அவைகளிலும் அதை ஒப்புதல் வாங்கினார்.

ஆனால்,அன்றைய கவர்னர் ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிடார்.அதன் பிறகு சித்தராமையா தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு,அந்த மசோதாவை திரும்பப் பெற்றுவிட்டது.இப்போது மீண்டும் பிஜேபி அரசு அமைந்ததும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவர திட்டமிடப்படுகிறது.

அதற்குமுன் அரசு ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க இருக்கிறது. அந்தக் குழு மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு சென்று அங்கு இந்தத் தடைக்காக செய்யபட்டுள்ள வழிமுறைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்.அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கர்நாடக கலாச்சாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி கூறி இருக்கிறார்.