கமிசன், கலெக்சனுக்கு தடை..! மாற்றம்..! முன்னேற்றம்..! மு.க.ஸ்டாலின்?

தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி முதலமைச்சரின் நான்கு தனிச் செயலாளர்களும் கமிசன், கலெக்சன் என்கிற வார்த்தைகளுக்கு எதிரானவர்கள் என்பதால் தலைமைச் செயலகத்தில் மாற்றம் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.


அதிமுக அரசு கமிசன், கலெக்சன், கரெப்சன் என செயல்படுவதாக பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தவர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரான கையோடு தலைமைச் செயலாளர் பதவிக்கு இறையன்புவை கொண்டு வந்தார். பொதுவாக தலைமைச் செயலாளர் பதவிக்கு ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை அனுசரித்து செல்பவர்களை நியமிப்பது தான் வழக்கம்.

ஏனென்றால் அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதனை ஏற்று செயல்படுத்தும் தலைமை பொறுப்பில் இருப்பவர் தலைமைச் செயலாளர். அந்த வகையில் எவ்வித நெருடலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தலைமைச் செயலாளர் நியமனத்தில் ஆட்சியாளர்கள் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் நேர்மையாக செயல்பட்ட ஒரே காரணத்திற்காக ஆட்சியாளர்களால் ஓரங்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் இறையன்பு. இத்தனைக்கும் அவர் சீனியர் அதிகாரியும் கிடையாது. அவருக்கு மேல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் சுமார் 10 அதிகாரிகள் வரை உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் பைபாஸ் செய்து இறையன்புவை மு.க.ஸ்டாலின் நியமித்தது திமுக மேலிட தலைவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதே போல் முதலமைச்சர் தனது தனிச் செயலாளர்களாக உதயச் சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகிய நான்கு பேருமே ஊழல் கறை படியாதவர்கள்.

பல வருடங்களாக ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்த போதும் இவர்கள் நான்கு பேரும் கமிசன், கலெக்சன் போன்ற செயல்களில் ஈடுபடாதவர்கள். அத்தோடு கடந்த ஆட்சியின் போது அமைச்சர்களுக்கு வளைந்து கொடுக்காத காரணத்தினால் உதயச்சந்திரன் மற்றும் அனு ஜார்ஜ் போன்றோர் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களைத்தான் தேடி அழைத்து வந்து தற்போது தனது தனிச் செயலாளர்களாக நியமித்துள்ளார் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் தனிச் செயலாளர் பதவி என்பது தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையானது.

பல்வேறு துறைகளில் இருந்து வரக்கூடிய கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் சாதக பாதகங்களை அறிந்து முதலமைச்சருக்கு சரியான தகவல்களை கொடுப்பதே தனிச் செயலாளர்கள் பதவி. அந்த வகையில் தன்னை வழிநடத்த நான்கு நேர்மையான அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

எனவே இவர்களை மீறி எந்த ஒரு திட்டத்தையும் அமைச்சர்களாக செயல்படுத்த முடியாது. அமைச்சர்கள் முன்மொழியும் திட்டங்களில் ஏதேனும் தவறு இருப்பது தெரியவந்தால் அதனை முதலமைச்சரிடம் நேரடியாக எடுத்துச் சொல்லும் பக்குவமும், துணிச்சலும் இந்த நால்வருக்கும் உண்டு.

இப்படி தலைமைச் செயலாளர் முதல் தனிச் செயலாளர்கள் வரை நேர்மையான அதிகாரிகளை நியமித்த மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்கும் ககன் சிங் பேடியை ஆணையராக்கியுள்ளார். இவரும் எவ்வித சர்ச்சையிலும் சிக்காத நேர்மையான மற்றும் துணிச்சலான அதிகாரி என்கிறார்கள்.

இப்படி நேர்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருவது சென்னை தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். ஏற்கனவே முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பைல்களையும் தற்போதே அதிகாரிகள் ஆராயத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

எனவே முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லாத, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பைல்கள் மட்டுமே தற்போது கிளியர் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். தவிர புதிதாக இனி விடப்போகும் டெண்டர்கள் தொடங்கி புதிய திட்டங்கள் வரை அனைத்தும் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்கிறார்கள்.

இந்த மாற்றம் தான் முன்னேற்றத்திற்கான அடிப்படை என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது வெளிப்படைத்தன்மையான நேர்மையான அரசை கொடுப்பதாக ஸ்டாலின் கூறினாலும் அதற்கு ஏற்ப அதிகாரிகளையும் நியமித்துள்ளார். எனவே இதே பாணியில் அரசு செயல்பட்டால் தமிழகம் முன்னேறும், இல்லை இது அனைத்துமே சிறிது நாட்கள் ஷோ காட்ட மட்டுமே என்றால் தமிழகத்திற்கு கஷ்ட காலம் தான்.