இ.பாஸ் தேவையேயில்லை.. இ.பாஸ் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிடுங்கள்.. முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்!

இன்றைய நிலையில் இ.பாஸ் தேவையில்லை, எனவே இ.பாஸ் வழங்கும் திட்டத்தை நிறுத்தவேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன்.


தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்ற வியாபாரிகள், தினக்கூலி உழைப்பாளிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.  

அதேபோல் சொந்த ஊர்களில் உள்ள வயதான, சிகிச்சை பெறும் பெற்றோரை, அவ்வப்போது சென்று கவனிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இறுதிச் சடங்குகளுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றால், இறப்புச் சான்று கட்டாயம் என்று உள்ளது.

துக்க வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக இறப்புச் சான்று பெற்று அனுப்பி வைக்க இயலாது. இதனால் பலர் துக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய, நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய காரணங்களுக்காக பயணிக்க இ-பாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.

மேலும் ஒருமுறை ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பிறகு அந்த எண்ணைக் கொண்டு, சரியான ஆவணங்களுடன் எத்தனை முறை விண்ணப்பித்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகின்றன என செய்திகள் வருகின்றன.

எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் தேவையான மாற்று வழிகளையும் கையாள வேண்டுமெனவும், மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்ற நிலையால், சனிக்கிழமைகளில் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக கூடும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றாமலும் இருப்பதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. 

எனவே, பொதுமக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தளர்த்த வேண்டுமெனவும்; பிற நாட்களில் கடைபிடிக்கப்படும் விதிகளையே ஞாயிற்றுக் கிழமையும் அமலாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சில நிபந்தனைகளுக்குட்பட்டு படிப்படியாக பொதுப் போக்குவரத்தை துவக்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.