சூரியனுக்கு குழந்தை பிறக்காதாம்! இந்துக்களை மீண்டும் வம்பிழுக்கும் தி.க.!

மற்ற எந்த மதத்தின் மீதும் விமர்சனம் வைக்காத திராவிடர் கழகம் தொடர்ந்து இந்து மக்கள் மீது மட்டும் பல்வேறு விமர்சனம் வைத்துவருகிறது.


இப்போது சூரிய கிரகணம் குறித்தும் மக்கள் கடவுளாக வழிபடும் சூரியனை விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் கி.வீரமணி. கிரகணங்கள் என்பவை சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை - பூமி, சூரியனை சுற்றி வரும்போது - ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் மறைப்புகள் ஆகும்; குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அது விலகிவிடும்; வழக்கம் போன்ற வெளிச்சம் பூமியில் உள்ளோருக்குக் கிடைக்கும்.

இதை அறிவியலில் - விஞ்ஞான வகுப்பில் நமது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும்கூட தேவையற்ற புராண மூடநம்பிக்கைக் குப்பைகளையும் நமது மாணவர்கள், இளம்பிஞ்சுகள் உள்ளத்தில் அச்சுறுத்தும் வகையில், கற்பனைக் கட்டுக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி, அதன் தோஷம் நீங்க, தர்ப்பைப் புல்லை, சட்டிப் பானை முதல் வீட்டில் எல்லா இடங்களிலும் போடவேண்டும்;

பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ‘‘கிரகண தோஷம்‘’ நீங்கிட மந்திரம் ஜபித்து, தானம் வழங்கவேண்டும் என்றும், அந்தக் கிரகணத்தில் பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் - வெளியே வரக்கூடாதென்றும், இன்னும் பல மூடநம்பிக்கைகளை அடுக்கடுக்காய் மூளைக்கு விலங்கு போட்டு, நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.

கிரகணம்பற்றி விஞ்ஞான பாடம் எடுக்கும் ஆசிரியர்களே, வீட்டில் குளிப்பது, தர்ப்பைப் புல்லைப் போடுதல் முதலிய சடங்குகளுக்குள் சரணாகதி அடைவது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியார் கூறுவதுபோல், படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; வெறும் தேர்வு - மதிப்பெண் படிப்பினால் காதொடிந்த ஊசி அளவுக்குக்கூடப் பயனில்லை!

‘ராகு, கேது என்ற பாம்புகள்’ விழுங்குவதுதான் புராணக் கதை! சூரியனுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன் என்ற பாரத (பாதக) கதை. சூரியனுக்கும், சந்திரனுக்கும் 27 பெண்டாட்டிகள் என்பது, சந்திரன் பெற்ற சாபத்தால்தான் தேய்பிறை - பிறகு வேண்டிக் கொண்டதால் வளர்பிறை என்ற பூகோள அடிப்படை அறிவையே கெல்லி எறியும் விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானக் கதைகள்!

படித்தவர்கள் பலர்கூட ஜோதிடத்தை நம்பி நாசமாகிறார்கள்; ஏடுகள் ராசி பலன், வார பலன், நாள் பலன் எல்லாவற்றிற்கும், ஆங்கில ஆண்டுக்கும் பிறந்த நாளை வைத்து, இந்த கிரக பலன் கூறுவது எவ்வளவு வேடிக்கையும், விந்தையும் நிறைந்தது! இதில் கூடுதல் வெட்கக்கேடு - கம்ப்யூட்டர் ஜோதிடமாம்! அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்பும் வெட்கக்கேடு!

ஜோதிடம் என்பது போலி விஞ்ஞானம் புதிய கிரகங்கள் ஏராளம் உள்ளனவே - அவற்றிற்கென்று ஜோதிடத்தில் இடம் இல்லையே! செவ்வாய்த் தோஷம் பேசி, அதை நம்பி பல பெண்களின் திருமண வாழ்க்கையைக்கூட இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமை உள்ள நாட்டில், செவ்வாய்க் கோளில் நாம் ஏவிய ஏவுகணை ராக்கெட்டுகள் வெற்றிகரமாகத் திரும்பினவே - அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமையிலே - அதைக் கண்ட பிறகாவது, திருந்தவேண்டாமா?

மூடநம்பிக்கை இருளிலிருந்து பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வரவேண்டாமா என்று கேட்டுள்ளார்.