ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை! 4 மாதங்களில் மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்தனர்!

இந்திய ஆட்டோ மொபைல் துறையில் கடந்த 4 மாதங்களில் மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.


கடந்த ஆண்டு முதலே இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையில் மந்தமான சூழல் நிலவி வருகிறது. கார்களின் விற்பனை கடந்த ஆண்டு முதலே குறையத் தொடங்கியது. இந்த ஆண்டு கார்களின் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு குறைய ஆரம்பித்துள்ளது.

அதிலும் கடந்த மூன்று மாதங்களில் கார்களின் விற்பனை கடுமையாக குறைந்த காரணத்தினால் மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், மகேந்திரா உள்ளிட்ட அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்துள்ளது.

ஒரு படி மேலே சென்று டாடா நிறுவனம் கார் உற்பத்தி ஆலைகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் கார் உற்பத்திக்காக டாடா நிறுவனம் ஜார்கண்டில் பிரத்யேகமாக நடத்தி வரும் உருக்கு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செலவை குறைக்கும் வகையில் தொழிலாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஷோரூம்களில் உள்ள தற்காலிக ஊழியர்களை முதற்கட்டமாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைவிட்டு அனுப்பி வருகின்றன.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் வரை ஆட்டோ மொபைல் துறையில் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் கார் விற்பனை உயராத வரை மீண்டும் அத்துறை புத்துணர்ச்சி பெற வாய்ப்பில்லை என்கிறார்கள்.