அந்த பணம் ட்ரீட்மெண்டுக்காக கொண்டு வந்தது! வேலூரில் தவித்த நேபாளப் பெண்கள்! தெய்வம் போல் வந்து நெகிழ வைத்த ஆட்டோக்காரர்!

வேலூரில் நோபள பெண்கள் மருத்துவமனை செலவுக்காக கொண்டு வந்து தவற விட்ட பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


பல விஷயங்களில் நாம் அண்டை நாடுகளை பற்றி பெருமையாக பேசிக்கொண்டாலும், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த பல நோயாளிகள் இன்றும் தமிழகத்திற்கு வந்துதான் பிரதான நோய்களுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர் என்பது நமக்கு எப்போதும் இருக்கும் பெருமை.  

நேபாளத்தைச் சேர்ந்தவர் அமிர்தராய் என்பவர் தன் உறவினர் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் சி.எம்.சி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இருவரும் அறை எடுத்து தங்கியுள்ள நிலையில் வேலூரில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக முதலில் கோட்டைக்குச் சென்றனர்.

பின்னர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிப்பார்த்தனர். பின்னர், தங்கும் விடுதிக்கு செல்வதற்காக ரத்தினகிரி நந்தியாலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளனர். சி.எம்.சி. அருகே ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் இறக்கிவிட தங்களுடைய பணப்பையை மறந்து ஆட்டோவிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் நேபாள பெண்கள் தங்களது பணப் பையை தவற விட்டள்ளதை கவனித்தார். 25,000 ரூபாய், ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன. அந்த பண பையை மீண்டும் தவற விட்ட பெண்களிடம் கொடுக்க சி.எம்.சி. அருகே வந்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் நேராக வேலூர் வடக்குக் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளரிடம் நடந்ததை தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பணப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதே சமயம் பணப்பையை தவறவிட்ட பெண்களும் புகார் அளிக்க காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு பணப்பையை இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சரவணனின் நேர்மையைப் பாராட்டி இன்ஸ்பெக்டர் நாகராஜன் ரூ.500 பரிசாகக் கொடுத்தார். நேபாளப் பெண்களும் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டி ரூ.2000 வழங்கினர். பின்னர், அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவப்படுத்தினார் காவல் ஆய்வாளர் நாகராஜன்.  

ஒருவேளை ஆட்டோ ஓட்டுநர் பணப்பையை தராமல் இருந்தால் பின்னர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது வழக்குப்பதிந்து சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார். 25,000 பணமும் போக, அன்றா வருமானமும் போய் வாழ்வாதாரத்தை இழந்திருப்பார் ஆட்டோ ஓட்டுநர். தற்போது நேர்மையாக நடந்து கொண்டதால் 2,500 பணமும் கௌரவுமும், பாராட்டுகளும் கிடைத்துள்ளது. இனி அவர் நிம்மதியாக உறங்குவார்.