ஊழல் அதிமுகவை அபகரிக்க துக்ளக் குருமூர்த்தி பிளான்! நாறடிக்கும் விசிக!

அ.தி.மு.க. கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார் துக்ளக் பத்திரிகையை நடத்திவரும் குருமூர்த்தி.


அ.தி.மு.க. என்ன செய்தால் ஜெயிக்க முடியும் என்று வழிகளும் காட்டியிருக்கிறார். அடுத்த கட்சியான அ.தி.மு.க. மீது திடீர் அக்கறை ஏன் என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக துக்ளக் குருமூர்த்தி அழுகை இருக்கிறது.

இந்த வார துக்ளக்கில் அ.தி.மு.க. மீது அக்கறை கொள்வது போல சுயபரிசோதனை செய்ய வேண்டும்  என்று தலையங்கம் எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லுகிற அன்றைய பாரம்பரியத்தொழிலை இன்றைக்கும் குருமூர்த்தி மறக்காமல் செய்து வருகிறார். அதிமுகவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்களை குருமூர்த்தி முன்வைக்கிறார்.

அதில் முக்கியமானவை அ.தி.மு.க.வின் ஊழல், ஒற்றுமையின்மை. இதை சரி செய்து,மீண்டும் 2021 ஆம்  ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமாம். இந்த உபநிடதங்களை அருளியுள்ளார் குருமூர்த்தி. நல்லவேளை ஊழலிருந்து தப்பிக்க யாகம் எதுவும் நடத்த சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் போட்டி போட்டுக்கொண்டு இந்த ‘மன்னர்கள்’ செய்தாலும் செய்வார்கள்.

அது சரி, இந்த குருமூர்த்தி தொடர்ந்து ‘இம்போட்டன்சியல்’ என்றும் அமைச்சரவைக்காக காத்துக்கிடக்கிறார்கள் என்றும் கடுமையாக அதிமுகவை விமர்சிக்கிறார். ஆனால் இந்த அரசாங்கமே 2021ம் ஆண்டும் தொடரவேண்டும் என்று கூறுவதன் ரகசியம் என்ன? ஒரு ஊழல் ஆட்சியே தொடரவேண்டும் என்று கூறுவதன் உள்நோக்கம் என்ன?

இந்த ‘இம்போட்டன்சியல்’அரசாங்கமே தொடரவேண்டும் என்று ஆசைப்படுவதன் ரகசியம் என்ன? இதைவிட  சிறந்த அடிமைகள் நமக்கு சிக்கமாட்டார்கள் என்பதுதான் குருமூர்த்தியின் நம்பிக்கை. ‘எவ்வளவு அடித்தாலும் அடி விழுகாதது போல சிரித்துக்கொண்டே,  எதுவும் நடக்காதது போல’ செயல்படுகிற ஓபிஎஸ், ஈபிஎஸ் போல இனி யாராவது குருமூர்த்தி வகையறாக்களுக்கு கிடைப்பார்களா?

தங்களுடைய சனாதனக்கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட அதிமுக போல, எந்த கட்சியும் இனி கிடைக்காது.  அதனால் தான், திமுகவை, அதிமுகவுக்கு வலிமையான பகை சக்தி என்று நினைவு படுத்தி அந்த பகைக்குள் தங்களுடைய ‘சனாதன அரசியலை’ நிறுவ முயற்சிக்கிறார். அதிமுகவை போல திமுகவையோ ஏனைய கட்சிகளையோ கையாள முடியாது என்பதால் தான் எவ்வளவு மோசமான ஊழல் கட்சியாக, மக்கள் விரோத கட்சியாக அதிமுக இருந்தாலும் பரவாயில்லை, தூக்கி நிறுத்துவோம் என்று குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார்.

குருமூர்த்தி என்ன இனி மோடியே நினைத்தாலும் தமிழர் நாட்டில் பா.ஜ.க.வின் செயல்திட்டம் வெற்றி பெறாது. ஆமாம், அ.தி.மு.க.வை பற்றி குருமூர்த்தி எழுதினால், விடுதலை சிறுத்தைகளுக்கு ஏன் வலிக்கிறது, அ.தி.மு.க.வினர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பதில்தான் ஒளிந்திருக்கிறது சாதி அரசியல்.