கொட்டிய மழை! நிறைந்தது அனந்தசரஸ் குளத்தின் நீராழி மண்டபம்! நீருக்குள் முழுமையாக சென்ற அத்திவரதர்!

அத்திவரதர் வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபம் மழையால் நிரம்பி வழிவதை பக்தர்கள் மகிழ்ச்சியோடு கண்டு களித்து வணங்கி செல்கின்றனர்.


காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வரதராஜர் திருக்கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் அனந்தசயனம் கொண்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களின் பார்வைக்காக 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் வெளியில் எடுக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வைக்கப்படுவார். 

இந்நிகழ்வு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை நிகழ்ந்தது. இறுதியாக ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நள்ளிரவு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டது.  இந்த நீராழி மண்டலமானது அண்மையில் பெய்த மழையால் நிரம்பி வழிகிறது. 

மொத்தம் 24 படிக்கட்டுகள் கொண்ட இக்குளத்தில் இரண்டு படிக்கட்டில் வரை நீர் நிரம்பி வழிவதால் கண்கொள்ளாக்காட்சியாக தென்படுகிறது. மேலும் அப்பகுதியில் செல்லும் பக்தர்கள் நீராழி மண்டபத்தை கண்டு பயபக்தியுடன் வணங்கிச் செல்கின்றனர்.

அத்திவரதரை வெளியில் எடுக்கும் 48 நாட்கள் கடும் வறட்சி நிலவும் எனவும் மீண்டும் ஆனந்த சயனத்தில் சென்ற பிறகு தொடர்ந்து மழை பொழியும் என ஐதீகம் உள்ளது. தற்போது அதற்கு ஏற்றார் போலவே வானிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.