வறுமை! தந்தை புற்றுநோய்க்கு பலி! பயிற்சியாளர் திடீர் மரணம்! ஆனாலும் சாதித்த கோமதி! கலங்கும் பெற்ற தாய்!

தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கோமதி மாரிமுத்து, வாழ்க்கையில் பல்வேறு தடைகளையும், துயரங்களையும் கடந்து வந்ததாகக் கூறுகிறார் விவசாயக் கூலியான அவரது தாய் ராஜாத்தி


கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர்  முடிகண்டம் கிராமம். பேருந்து வசதி இல்லாத சிறிய ஊர். தந்தை விவசாயக் கூலியாக வேலை செய்தவர், அவர் மறைவுக்குப் பின் பிள்ளைகளை காப்பாற்ற அவரது தாய் விவசாயக் கூலி வேலைக்கு சென்று வந்தார். 

கோமதி பதக்கம் வாங்கிய செய்தி வெளியானதும் முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுச் செய்தி வெளியிட்டு வந்த நிலையில் அது குறித்து எதுவும் தெரிய்யாமல் ராஜாத்தி வயல் வேலைக்குச் சென்றிருந்தார். அவரது வீட்டுக்கு ஊடகத்துறையினர் சென்றதைத் தொடர்ந்து அவரது மகள்கள் அவரை அழைத்து வந்தனர்.

மூத்த மகன் சுப்பிரமணி ஊர்க்காவல் படையில் வேலை செய்வதாகவும், அடுத்து பிறந்த 3 பெண் குழந்தைகளில் இருவருக்கு திருமணமாகிவிட கடைக்குட்டியான கோமதி படிப்பிலும், விளையாட்டிலும் சுட்டியாக இருந்ததாகவும் கூறுகிறார் தாய் ராஜாத்தி. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இருந்த தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு புற்றுநோயால் முன் இறந்துவிட, கோமதி இடிந்து போனதாகவும் கூறினார். 

பள்ளிப் படிப்புக்குப் பின் கோமதியை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் சேர்த்துவிட்டதாக ராஜாத்தி தெரிவித்தார். மிகுந்த சிரமத்துக்கிடையே கோமதி படிப்பையும் விளையாட்டையும் தொடர்ந்து வந்த நிலையில் அவரது பயிற்சியாளரான காந்தி இறந்தது பெரிய இழப்பாக இருந்ததாகவும் கூறுகிறார்.

கோமதி மனம் உடைந்தாலும்  முயற்சிகளை கைவிடாமல் பயிற்சிகளை தொடர்ந்து வந்த நிலையில் காலில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறுகிறார். ஆனால் கடந்த வாரம் விளையாடுவதற்காக வெளிநாடு செல்லவேண்டும் என கோமதி தெரிவித்தபோது  அவரது வெற்றிக்காககடவுளை வேண்டிக்கொண்டதாகவும், இந்நிலையில் அவரது வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்த ராஜாத்தி அம்மாள் கோமதி ஏற்கன்வே வாங்கிய மெடல்களை ஆர்வத்துடன் காட்டினார்.