கடவுளை மறுப்பவர்கள்.. நாத்திகம் பேசுபவர்கள் தமிழனே அல்ல! தேனியில் தமிழ் எம்.பி. தடாலடி!

தேனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இலங்கை எம்.பி சீனித்தம்பி யோகேசுவரன் கலந்து கொண்டார்.


விழாவின் இறுதியில் அவர் பேசும்போது,இலங்கை ஆன்மீகத்தின் அஸ்த்திவாரம் தமிழகம் என்றார்.ஆறுமுக நாவலரும் எங்கள் வழிகாட்டிகள். அவர்கள் இலங்கையை ' சிவபூமி' என்று சொல்லி இருக்கிறார்கள்.இலங்கையில் நாங்கள் சைவமதத்தை பின்பற்றுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி என்பது இன,மத ஒற்றுமையை வளர்க்கும் விழா என்றவர்,தமிழ் என்றால் சைவம்,தமிழர்கள் சைவர்கள்,கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாத்திகம் பேசுவோர் தமிழர்களாக இருக்கவே அருகதை அற்றவர்கள் என்றார்.மட்டக்களப்பு தொகுதியில் தமிழ் அரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட யோகேசுவரன் டி.என்.ஏ என்கிற தமிழர் கூட்டமைப்பில் இருக்கிறார்.

இவர் கொஞ்சம் அதிரடிப் பார்ட்டிதான்,கடந்த ஆண்டு கும்புருமுனையில் கட்டப்பட்டு வரும் எத்தனால் தொழிற்சாலை பற்றி வாய்திறக்காமல் இருக்க தனக்கு 50 மில்லியன் இலங்கை பணம் தருவதாக பேரம் பேசப்பட்டதாக பரபர்ப்பை கிளப்பினார்.பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் அது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது,பேசியது யார் என்று தெரியவில்லை தொலை பேசியில்தான் பேசினார்கள் என்று சமாளித்து விட்டார்.

இலங்கையில் 'சிவா சேனை' என்கிற அமைப்பை துவங்கி அதன் அமைப்பாளர்களில் ஒருவராக செயல்படுகிறார்.முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர் மறவன் புலவு சச்சிதானந்தன், திரிகோணமலை கைலாச ஆதீனம் மற்றும் சீனிதம்பி யோகேசுவரன் எம்.பி மூவரும் இந்த இலங்கை ' சிவா சேனை'யின் அமைப்பாளர்கள்.

இந்த அமைப்பின் நோக்கம் , மற்ற மதத்தினரிடம் இருந்து இந்துக்களைக் காப்பாற்றுவது என்று சொன்ன யோகேசுவரன்,இந்தியாவில் இருக்கும் சிவசேனைக்கும் எங்களுக்கும் எந்த வித உறவும் இல்லை என்று அப்போது சொன்னார்,ஆனால் அவருடைய தேனி விநாயர் சதுர்த்தி விழா பேச்சைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.