கார்த்திகை தீபத்தால் பற்றி எரிந்த தீ! மகளை காப்பாற்ற கடைக்குள் சென்ற தந்தைக்கு ஏற்பட்ட பயங்கரம்! அரியலூர் அதிர்ச்சி!

கார்த்திகை மாதத்திற்கு ஏற்றிய தீ கடைக்கு பரவியதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்குத் தெருவில்கழுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். செல்வத்தின் மகள் பவானி கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று கார்த்திகை தீப ஒளி நாளை முன்னிட்டு, கடையில் தீப விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

அப்போது சாமி படம் அருகே இருந்த தீபத்தில் இருந்த ஒளி கடையின் பக்கவாட்டு ஓலைக் கீற்றுக்கு பரவியது. இதையடுத்து தீ வேகமாக பரவ பவானியின் உடலையும் பற்றிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை அவரை கடையில் இருந்து வெளியில் தள்ளினார். ஆனால் தீ வேகமாக பரவ மேற்கூரையில் இருந்த ஓலைக்கீற்றுகள் எரிந்தபடியே செல்வத்தின் மீது விழுந்தது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், செல்வத்தையும், பவானியையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவானிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் கடைக்குள் இருந்த மளிகை சாமான்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.