அமெரிக்காவிலும் படிப்பதற்கு லஞ்சம் கொடுக்கிறாங்களா? சிக்கிக்கொண்ட சினிமா நடிகைக்கு சிறை தண்டனை!

இந்தியாவில் மட்டும்தான் கல்வித்துறை மிகவும் கெட்டுப்போய் இருக்கிறது என்று பார்த்தால், அமெரிக்காவிலும் நிலவரம் மோசமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய மகள் படிப்புக்காக தவறு செய்த பெண் இப்போது சிறைக் கம்பி எண்ணுகிறார்.


2005ம் ஆண்டு வெளியான டிரான்ஸ்அமெரிக்கா திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் பெலிட்டி ஹப்மான். இவர் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றவர்.

இவரது மூத்த மகள் சோபியாவை, கல்லூரியில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுத வைத்தார் ஹப்மான். அப்போது, கல்வித் துறை அதிகாரிகளுக்கு 15,000 அமெரிக்க டாலர்களை ஹப்மான் லஞ்சமாக கொடுத்த தகவல் வெளி வந்து, விசாரணை துவங்கியது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இப்போது, அவருக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

அமெரிக்க பல்கலைக்கழகங்களான யேல், ஸ்டான்போர்ட், ஜார்ஜ்டவுன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேக் ஃபாரஸ்ட் ஆகியவற்றில், தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 51 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், பெலிசிட்டி ஹப்மானும் ஒருவர்.

நடிகை 14 நாட்கள் சிறையில் கழிக்க வேண்டுமென்றும், 250 மணிநேரங்கள் சமுதாய சேவையில் ஈடுபட வேண்டும்; 30,000 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின் பேசிய, பெலிசிட்டி ஹப்மான், ‘என்னுடைய செயல் தவறானது. அப்படியொரு காரியத்தில் ஈடுபட்டதற்காக நான் வெட்கப்படுகிறேன்; என்னையே நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதுவே நம்மூராக இருந்தால், நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்னை சிக்கவைக்க யாரோ சதி செய்கிறார்கள் என்று சொல்லி, சிரித்தபடி வேனில் கைகாட்டிப் போயிருப்பார்கள்.