பா.ஜ.க.வுக்கு கல்தா கொடுத்த அரசகுமார்! காரணம் என்ன தெரியுமா?

ஒரு கல்யாணப் பேச்சு கட்சி மாற வைத்துவிட்டது. புதுக்கோட்டையில் நடந்த கல்யாண நிகழ்வில் ஸ்டாலினை பார்த்ததும் அவரை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார்.


அதுவும் சாதாரண பேச்சு அல்ல. ‘‘12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எப்படி பார்த்தேனோ, அதே கட்டுடல் குறையாமலும், அழகு குறையாமலும் அப்படியே இப்போதும் இருக்கிறார். இதை அரசியலுக்காக சொல்லவில்லை. ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான்.

ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஒரு இரவுக்குள் கூவத்தூருக்குச் சென்று பிடித்திருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் காத்திருக்கிறார். 2021ல் மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாங்கள் பார்த்து அகமகிழ்ச்சி கொள்வோம்'' என்று பேசினார்.

அது எப்படி தமிழகத்துக்கு பா.ஜக. முதல்வர் வருவார் என்று சொல்லாமல் ஸ்டாலினை சொல்லலாம் என்று ஏகப்பட்ட காவிகள் டென்ஷன் ஆனார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், இனி கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் அரசகுமார் கலந்துகொள்ளக் கூடாது என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் நரேந்திரன் உத்தரவிட்டார்.

எனக்குக் கட்டளையிட பொதுச் செயலாளர் நரேந்திரனுக்கு எந்த அதிகாரம் இல்லை. அது மரியாதை நிமித்தமாக பேசப்பட்டது என்று விளக்கம் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவந்தார் பி.டி.அரசகுமார். இந்த நிலையில் கட்சி பதவி பொறுப்பில் இருந்து பி.டி.அரசகுமாரை விலக்குவதற்கு பா.ஜ.க.வில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். அதனை தெரிந்துகொண்ட அரசகுமார், முன்கூட்டியே தி.மு.க.வில் இணைய முடிவெடுத்துவிட்டார்.

அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த பி.டி.அரசகுமார்,. திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முறைப்படி தி.மு.க.வில் சேர்ந்துகொண்டார். 2021ல் ஸ்டாலின் நிச்சயம் தமிழக முதல்வராக வருவார் என்று இப்போதும் தெரிவித்து இருக்கிறார்.

பா.ஜ.க. இப்போ என்ன செய்யப்போகிறது?