ஓபிஎஸ் நிகழ்ச்சியில் இனி பங்கேற்கமாட்டேன்! ஆண்டிப்பட்டி எம்எல்ஏ திடீர் அறிவிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதல்வரும் ஆகிய ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை இனி புறக்கணிக்கப் போவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகா ராஜன் போர்க் கொடி தூக்கி உள்ளார்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டி இட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க எம்.எல்.ஏ மகாராஜன். இவர் ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த எம்எல்ஏ மகாராஜன் ஆண்டிபட்டி தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசினேன். நான் சட்டமன்றத்தில் பேசியதை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கேட்டுக் கொண்டிருந்தார். 

அதில் முக்கியமானது ஆண்டிபட்டி பகுதியின் வறட்சியைப் போக்கும் விதமாக முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன். மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்வர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை என  குற்றம் சாட்டினார் மகாராஜன்.

ஆண்டிபட்டி தொகுதியில் 152 கிராம மக்களின் கனவுத் திட்டமாக உள்ளது முல்லைப் பெரியாறு தண்ணீரை கொண்டு வருவது. வைகையை மட்டுமே நம்பி வறட்சியின் பிடியில் இருக்கும் விவசாயிகளுக்கும், லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கும் திட்டமாகவும் இருக்கும் இந்த திட்டம் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால் ஆண்டிபட்டி மக்களுக்கு உபயோகப்படும் வகையில் அதை செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார் எம்எல்ஏ மகாராஜன்.

ஆண்டிபட்டி மக்களுக்காக முல்லைப் பெரியாறில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என எப்போது மேடையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிக்கிறாரோ அந்த மேடையில் அவருக்கு நானே முதலில் மாலை அணிவிப்பேன். அதுவரை அவர் பங்கேற்கும் எந்த அரசு ஒரு அரசு நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன் என கூறிவிட்டார் மகாராஜன் எம்எல்ஏ.

தேனி மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையினர் என யார் அழைத்தாலும் அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லப் போவதில்லை. ஏனென்றால் என்னை நம்பி மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். அவர்களுக்கான திட்டம் நிறைவேற வேண்டும் என்பதே எனது ஆசை எக் கூறிவிட்டு சென்றார் திமுக எம்எல்ஏ மகாராஜன்.