எம்.ஜி.ஆருக்கே மரியாதை இல்லை, இந்த லட்சணத்தில் அம்மா படப்பிடிப்புத் தளம் அவசியமா?

இன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 16.9.2019 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களிடம் வழங்கினார்கள்.  

அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.

அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்,

""""பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா, இருபெரும் தலைவர்களுடைய பெயரிலே உங்களுடைய திரைப்படத் துறைக்கு ஒரு அற்புதமான படப்பிடிப்புத் தளத்தை நீங்கள் அமைத்திருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்று சொன்னால், படப்பிடிப்பிற்கு, வெளியே சென்று படம் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை மாற்றி, தமிழகத்திலே, அதுவும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அந்தத் தளம் மேலும், மேலும் வளர்ந்து இந்தியாவிலேயே சிறந்த படப்பிடிப்புத் தளமாக அமைய என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்று வாழ்த்தினார்கள்.

 எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தை பராமரிக்கத் தெரியாத அரசு அம்மா படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி என்ன செய்யப்போகிறார் எடப்பாடி என்ற கேள்வி எதிரொலிக்கிறது.