அம்மா உணவகத்தால் மாதம் 3 ஆயிரம் ரூபாய் மிச்சம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 42


அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வெளியே வந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன், ஆய்வுக்கு வந்த மேயர் சைதை துரைசாமியை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சிக்கு ஆளானார். அவரிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். ‘’நான் முன்பு காலையும் மதியமும் ஹோட்டலில் சாப்பிட்டு வந்த காரணத்தால் வயிறு அடிக்கடி கெட்டுப்போய் டாக்டருக்கு நிறைய செலவு செய்துகொண்டு இருந்தேன். இப்போது அம்மா உணவகத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறேன்’’ என்று பாராட்டினார்.

அவர் மேற்கொண்டு, ‘’இப்போது காலையில் வெறுமனே 5 ரூபாய் இருந்தால்போதும், வயிறு நிரம்ப இட்லி சாப்பிட முடியும். மதிய நேரத்தில் ஒரு சாம்பார் சாதம், தேவை என்றால் கூடுதலாக ஒரு தயிர் சாதம் என்றாலும் 10 ரூபாய் போதும். இதற்கு முன்பு ஹோட்டலில் சாப்பிடுவதற்கு மட்டும் இரண்டு வேளையும் சேர்த்து 100 ரூபாய்க்கு மேல் செலவு ஆகிவிடும். அந்த வகையில் மட்டும் எனக்கு இப்போது ஒவ்வொரு மாதமும் சுளையாக 3,000 ரூபாய் மிச்சமாகிறது.

இதை விட ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. தினமும் மிச்சமாகும் 100 ரூபாயை சேமித்துவிடுவதால் மாதம் 3,000 ரூபாய் தனியே மிச்சமாகிறது. இந்த சேமிப்பு எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்த பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்டோ வாங்கிவிடுவேன். அதன்பிறகு மாத தவணை கட்டுவதும் எனக்கு ரொம்பவே எளிது. இதற்கெல்லாம் அம்மா உணவகமே காரணம்’’ என்று மனதார நன்றி கூறினார்.

அவரே இன்னொரு கோரிக்கையும் வைத்தார். ‘’நான் தினமும் இரவு சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போய்விடுகிறேன். ஆனால், என்னுடைய ஆட்டோ நண்பர்கள் நிறைய பேர் இரவு வீட்டுக்குப் போக முடியாத சூழலில் கண்ட கண்ட ஹோட்டலிலும் சாப்பிட்டு உடலை கெடுத்துக்கொள்கிறார்கள். அதனால் இரவிலும் அம்மா உணவகத்தில் ஏதேனும் உணவு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்’’ என்றார்.

இந்த கோரிக்கை சைதை துரைசாமியை சிந்திக்கச் செய்தது.

- நாளை பார்க்கலாம்.