அம்மா உணவகத்தில் ஒளவைப் பாட்டி

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 34


அம்மா உணவகத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதில் சைதை துரைசாமி ரொம்பவே உறுதியாக இருந்தார். உணவு சமைப்பதும், உணவு பரிமாறுவதும் பெண்களாக இருந்தால் மட்டுமே, வருபவர்களுக்கு வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வு கிடைக்கும் என்று அதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கினார்.

அம்மா உணவகத்தில் பணியாற்றுவதற்கு ஊழியர்களை மகளிர் சுய உதவிக் குழுவினரை தேர்வு செய்த நேரத்தில் ஒரு புதிய பிரச்னை எழுந்தது. அதாவது, தினமும் காலை 7 மணிக்கு அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்களுக்கு இட்லி வழங்குவது என்றால், அதிகாலை காலை 5 மணிக்கு முன்பாகவே பெண்கள் அங்கு வந்து உழைத்தால்தான் சரியாக இருக்கும்.

அத்தனை அதிகாலையில் பெண்கள் வருவது சாத்தியமா, அவர்கள் குடும்பத்தை எப்படி கவனிப்பார்கள் என்பதெல்லாம் கேள்விகளாக எழுந்தன. இதற்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்குமாறு பெண்களிடமே கேட்டார் சைதை துரைசாமி. அத்தனை பெண்களும் ஒருமித்த கருத்தில், ‘தினமும் நாங்கள் குடும்பத்திற்காக அதிகாலை எழுந்து பழக்கப்பட்டவர்களே. அதனால், இது எங்களுக்கு எந்த சுமையும் இல்லை. ஷிஃப்ட் முறையில் பணியாற்றினால் எங்கள் குடும்பத்தினருக்கும் போதிய அளவு நேரம் ஒதுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.

அடுத்ததாக ஞாயிறு விடுமுறைதானே என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களுக்கு தமிழ் பாட்டி ஒளவையாரின் பாடலை பதிலாகக் கூறினார் சைதை துரைசாமி. இதுவே அந்த பாடல்.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் ஒரு நாளும்

என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது

இந்த பாடலுக்கும் அம்மா உணவகத்துக்கும் என்ன சம்பந்தம்?

- நாளை பார்க்கலாம்.