பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் சக்தி வாய்ந்தவர் அமித் ஷாதான் என்பது நிரூபணமாகியுள்ளது.
மோடிக்கு பிறகு அமித் ஷா தான்! ஓரம் கட்டப்படும் ராஜ்நாத் சிங்!

கடந்த வாரம் மத்திய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் பிரதமர் மோடிக்கு அடுத்து ராஜ்நாத் சிங் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ராஜ்நாத் சிங்கிற்கு பிறகுதான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதனால் கடந்த முறை போல பிரதமர் மோடிக்கு பிறகு ராஜ்நாத் சிங் தான் மத்திய அமைச்சரவையில் சக்தி வாய்ந்தவராக இருப்பார் என்று கருதப்பட்டது.
பிரதமர் பதவியில் இருப்பவர்கள் விடுமுறையில் செல்லும் போது, வெளி நாட்டில் சுற்றுப்பயணம் இருக்கும் போதே பிரதமர் பதவிக்கான அன்றாட பணிகளை செய்ய மத்திய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார். பொதுவாக மத்திய அமைச்சரவையில் பிரதமராக பதவி வகிப்பவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மத்திய அமைச்சர் தான் இந்தப் பணிகளை கவனிப்பது மரபு. அதன்படி கடந்த மத்திய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங் இரண்டாவதாக பதவி ஏற்ற நிலையில் அருண் ஜேட்லி மூன்றாவதாக பதவி ஏற்றிருந்தார்.
அப்போதும்கூட பிரதமர் மோடி வெளிநாடு சென்று விட்டால் அவரது பணிகளை இங்கு கவனிப்பது யார் என்று ஒரு கேள்வி எழுந்தது. ராஜ்நாத் சிங் - அருண் ஜேட்லி இடையே நடைபெற்ற போட்டியில் இறுதியில் ராஜ்நாத் சிங் தான் மோடிக்கு அடுத்த நிலை என்று முடிவெடுக்கப்பட்டது.
இதே நிலை தான் தற்போதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சரவைக் குழுக்கள் அண்மையில் அமைக்கப்பட்டன. அதாவது ஒவ்வொரு துறைக்கும் மத்திய அமைச்சர் தனியாக இருந்தாலும் கூட மிக முக்கியமான துறைகளின் முக்கிய முடிவுகளை சீனியர் மத்திய அமைச்சர்கள் கூட்டாக எடுக்க இந்த குழு அமைக்கப்படும்.
உதாரணமாக உள்நாட்டு பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சர்கள் குழு, பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சர்கள் குழு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு, நாடாளுமன்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு ஆகியவை அமைக்கப்பட்டு சீனியர் அமைச்சர்கள் இந்தக் குழுவில் இடம்பெறுபவர். மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுவதற்கான மத்திய அமைச்சர்கள் குழு என இரண்டு குழுக்களை புதிதாக உருவாக்கினார்.
ஏற்கனவே இருந்த பழைய மத்திய அமைச்சர்கள் குழு அனைத்திலும் ராஜ்நாத் சிங்கிற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவில் ராஜ்நாத் சிங் இருக்க இடம் அளிக்கப்படவில்லை. மாறாக அமித்ஷா மத்திய அமைச்சர்கள் குழு எட்டிலும் இடம் பெற்றிருந்தார். அதாவது ஏற்கனவே இருந்த ஐந்து குழுக்கள் மற்றும் புதிதாக மோடி அமைத்துள்ள மூன்று குழுக்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அனைத்து குழுக்களும் இடமளிக்கப்பட்டது.
இதன் மூலம் மத்திய அரசு நிர்வாகத்தில் மோடிக்கு பிறகு அமித் ஷாதான் என்பது நிரூபணமானது. இதற்கிடையே புதிய அமைச்சரவை குழுவில் ராஜாவிற்கு இடமளிக்கப்படாது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த குழுக்களிடம் ராஜ்நாத் சிங் பெயர் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட முதலிலேயே அவர் பெயர் சேர்க்கப்படாத இதன் மூலம் அவர் ஓரம் கட்டப் படுவது தெரிய வருகிறது.