நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்! பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! 4கிமீ ஓடி டிரைவர் செய்த செயல்! நெகிழ வைக்கும் சம்பவம்!

பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை நள்ளிரவில் மலைப்பாதை ஒன்றில் பத்திரமாக அழைத்து சென்று தாய், குழந்தையை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செம்பூர் என்ற மலைக் கிராமம். இந்த மலைக்கிராமத்தில் கூலித்தொழிலாளி தனது மனைவி பானுமதியுடன் வசித்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பானுமதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு 11 மணி அளவில் செம்பூர் மலைக் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றார் ஓட்டுநர் ஸ்டாலின். அவருக்கு துணையாக ஒரு உதவியாளர் வந்தார். பானுமதியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் 4 கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் சாலையின் குறுக்கே ஒரு லாரி பழுதாகி நின்றுள்ளது. மிகவும் குறுகலான சாலையில் ஆம்புலன்ஸ் வாகனகம் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தது. 

நள்ளிரவு நேரத்தில் பானுமதி பிரச வலியால் துடித்துக் கொண்டிருந்தார். என்னவென்று செய்வதறியாது திகைத்த ஸ்டாலின் வேறு ஒரு ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுக்க முயற்சித்தார். மலைப்பாதை என்பதால் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் எப்படியாவது இன்னொரு ஆம்புலன்ஸ் இருந்தால் மட்டுமே பானுமதிக்கு உதவியாக இருக்கும் என யோசித்த ஸ்டாலின் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்மல் என்ற கிராமத்திற்கு ஓடினார்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும் என்று தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் அதே 2 கிலோ மீட்டரை ஓடியே திரும்பினார். இதற்கிடையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பானுமதிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதே சமயம் ஸ்டாலின் அளித்த தகவலின்படி இன்னொரு ஆம்புலன்ஸ் வாகனம் லாரியின் மறுபக்கம் வந்து நின்றது. பின்னர் பானுமதி, குழந்தை ஆகியோர் கருமந்துரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  மலைப்பாதையில் நள்ளிரவில் சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு தாய் மற்றும் சேயை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலஸ் ஓட்டுநர் ஸ்டாலினுக்கு உறவினர்கள், மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர். தற்போது ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார்.