சென்னையில் புதிய டெலிவரி சென்டரை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது.
சென்னையில் டெலிவரி சென்டர் திறப்பு! அமேசான் ஆர்டர் இனி ஒரே நாளில் வீடு தேடி வந்துவிடும்!

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் அமேசான் நிறுவனம், தமிழகத்தில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அந்நிறுவனத்தின் பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மையங்களில் இருந்துதான், தமிழகத்திற்கு தேவையான
பொருட்களை டெலிவரி செய்யும் நிலை உள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில், அமேசான், தற்போது சென்னையில் புதிய டெலிவரி சென்டரை திறந்துள்ளது. இதன்மூலமாக, சென்னை வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உடனுக்குடன் தேவையான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க முடியும் என, அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி, நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் விரைவில் டெலிவரி சென்டர்கள் தொடங்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான முதலீடுகளை செய்ய உள்ளதாகவும், அமேசான் கூறியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் எனவும் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. சமீபத்தில்தான், உலக அளவில் உள்ள அமேசான் அலுவலகங்களிலேயே மிகப்பெரிய அலுவலகத்தை ஐதராபாத்தில் அந்நிறுவனம் திறந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.