கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் ஈஷாவின் அனைத்தும் நிகழ்ச்சிகளும் ரத்து!!
உலகம் முழுவதும் ஈஷாவின் அனைத்தும் நிகழ்ச்சிகளும் ரத்து!!
மத்திய அரசின் பொது சுகாதார ஆலோசனையை உடனடியாக செயல்படுத்தும் விதமாக, ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் நடைபெற இருந்த அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் மறுதேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்லும் கோவை ஈஷா யோகா மையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு மும்பையில் நடத்தவிருந்த ‘இன்னர் இன்ஜினியரிங்’ நிகழ்ச்சியும், ஏப்ரலில் அவர் மேற்கொள்ளவிருந்த தென் ஆப்ரிக்க பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், யோகா வகுப்புகளை நடத்துவதற்காக பயணிக்கும் யோகா ஆசிரியர்களும் தங்கள் பயணங்களை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்துக்கு வருகை தரும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஈஷா மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஈஷா மையத்திற்குள் உள்ள அனைத்து பொது இடங்களிலும் கையை சுத்தமாக வைத்திருக்க உதவும் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளன. ஈஷாவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பிற களப் பணியாளர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, ஈஷா மையத்துக்கு வெளிப்புறம் அமைந்து இருக்கும் ஆதியோகியை தரிசிக்க வரும் மக்களும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து சத்குரு கூறுகையில், “அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஈஷாவில் இருப்பவர்கள் யாருக்காவது வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவ குழுவினரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மனிதர்கள் தான் இந்த வைரஸை சுமப்பவர்களாக இருக்கிறார்கள். வைரஸ் தொற்றை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உறுதியாக எடுத்து செயல்படுத்த வேண்டியது மிக அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மையத்துக்கு வர திட்டமிட்டுள்ளவர்களுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள பயண ஆலோசனையின் அடிப்படையில் வழிக்காட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கடந்த 28 நாட்களில் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி உட்பட கோவிட் 19 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பவர்கள், அல்லது இந்த அறிகுறி இருக்கும் நபருடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தவர்கள் தங்கள் பயணத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.