13 மாடி கட்டிடம்! 8வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர்! அக்சயா ஹோம்ஸ் புராஜக்டில் விபரீதம்!

சென்னையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி பகுதியில் இருந்து கீழே விழுந்து திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அருகே உள்ள துரைப்பாக்கம் பகுதியில் 13 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இங்கு பெயிண்ட் அடிக்கும் பணி சிறிது நாட்களுக்கு முன் தொடங்கியது. இதற்காக சாரம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

அப்போது எட்டாவது மாடியில் இருந்து உரிய பாதுகாப்பு வசதி இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்திருந்த திருவண்ணாமலையை சேர்ந்த பரூக் என்பவர் தவறுதலாக நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அதிகளவு ரத்தம் வெளியேறி உயிரிழந்துள்ளார். 

இதைக்கண்ட சக பணியாளர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பரூக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? இல்லை, தடுமாறி விழுந்து உயிரிழந்துள்ளாரா? என்பது குறித்து மற்ற பணியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

பரூக் குடும்பத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.