அதிமுக கொடிக் கம்பத்தால் லாரிக்கு அடியில் சிக்கிய இளம் பெண்! கோவையில் ஒரு சுபஸ்ரீ சம்பவம்! அதிர்ச்சி பின்னணி!

கோவையில் இளம்பெண் ஒருவர் அதிமுகவினர் வைத்திருந்த கொடிக்கம்பத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கோவையில் 30 வயது மிக்க அனுராதா ராஜேஸ்வரி என்பவர் நேற்றையதினம் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை வந்திருப்பதால் சாலையோரம் நட்டு வைக்கப்பட்டிருந்த அதிமுகவினரின் கட்சி கொடிக்கம்பத்தில் மோதாமல் தவிர்க்க, தனது வாகனத்தை திருப்பியபோது சாலையில் வந்து கொண்டிருந்த டிரக் மீது மோதி படுகாயம் அடைந்துள்ளார். அந்த டிரக் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொருவரின் மீதும் மோதியுள்ளது.  

விபத்துக்குள்ளான இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இளம்பெண்ணின் கால் மீது டிரக் ஏறியதால் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  

ஏற்கனவே சென்னையில் செப்டம்பர் மாதம் இளம்பெண் ஒருவர் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.  

சாலையோரங்களில் பேனர் மற்றும் கொடிக்கம்பங்கள் வைப்பதை தவிர்க்க சென்னை உச்சநீதிமன்றம் அனைத்து கட்சியினருக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.