கொரோனா கட்சிப் பாகுபாடு பார்க்காமல் அடிக்கிறது.. திமுக எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா உறுதி!

கொரோனா கட்சிப் பாகுபாடு பார்க்காமல், அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் போட்டுத் தாக்கிவருகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சர் பெருமக்களை தொற்றிய பிறகு இப்போது தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவரை பிடித்துள்ளது.


ஆம், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இவருக்கு வயது 63. இவர் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.வாகவும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

திடீரென இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார் செங்குட்டுவன். இதையடுத்து ஓசூரிலுள்ள, காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு மாதிரி அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை தொடர்ந்து செங்குட்டுவன் வழங்கி வந்தார். உதவிபெற்ற தொற்று உறுதியானவர் மூலம் இவருக்கு பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், கூடுதல் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.