உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கும் நிலையில், வரும் 6ம் தேதியன்று அ.தி.மு.க. நடத்த இருக்கும் ஆலோசனைக் கூட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கும்? உள்ளாட்சித் தேர்தல் மழையால் தள்ளிப் போகுதாம்!
ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்றாலும், அடுத்த நாளே அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, இந்தக் கூட்டமே ஒரு கண் துடைப்புதான் என்று தெரிகிறது.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதியில் பெற்ற வெற்றி காரணமாக உள்ளாட்சியை நடத்திவிட வேண்டும் என்று கூட்டணிக்கட்சிகள் ஆர்வமாக இருந்தாலும், இன்னமும் எடப்பாடியும் பன்னீரும் பச்சைக்கொடி காட்டவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
மேலும், பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தலா இரண்டு மாநகராட்சிகளை கேட்பது அ.தி.மு.க.வை அலற வைத்திருக்கிறது. அதனால், முடிந்த வரையிலும் எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடவே அரசு முயற்சி செய்யும் என சொல்கிறார்கள்.
இது மழைக்காலம் என்பதால், மழையைக் காரணம் காட்டி தள்ளிவைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.
அதனால், 6ம் தேதிக் கூட்டம் மொத்தமே அரை மணி நேரம் மட்டுமே நடைபெறும் என்றுதான் சொல்லப்படுகிறது. எல்லா முடிவுகளையும் எடப்பாடியும் பன்னீரும் சிறப்பாக எடுப்பார்கள் என்று பேசிவிட்டு கலையப் போகிறார்களாம். பன்னீர் அமெரிக்கப்பயணம் முடித்து வரும் வரையில், அமைச்சரவை மாற்றம் இருப்பதற்கும் வழி இல்லை என்கிறார்கள்.