தி.மு.க.வும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இப்போது தேர்தல் பிரசார களத்தில் நிற்கின்றன. மற்ற கட்சிகளும் ஆயத்தம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் ஜனவரி மாதம் முதல் தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரியவந்துள்ளது.
ஜனவரியில் கிளம்புகிறது அ.தி.மு.க. தேர்தல் படை… விசேஷ வாகனங்கள் ரெடி
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் இதற்கான செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரசார பணிகள் குறித்து வியூகம் அமைத்து வருகிறார்கள்.
ஜனவரி மாதம் அதாவது பொங்கல் பண்டிகையையொட்டி அ.தி.மு.க. பிரசார பணிகளை மேற்கொள்ளும் என கட்சி வட்டாரங்கள் கூறின. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் விஷேச வாகனங்களில் சென்று மக்களின் ஆதரவை திரட்டுகிறார்கள். இதற்காக பிரசார வாகனங்கள் மற்றும் தேவையான சாதனங்களை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தேர்தல் பணிகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரசார பணிகளை எப்படி செய்ய வேண்டும். அடிமட்ட அளவில் எந்த வகையில் பிரசார யுக்திகள் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் பூத் கமிட்டி, பெண்கள் குழு, இளைஞர் பாசறை, ஐ.டி. பிரிவு ஆகியவற்றை அனைத்து பஞ்சாயத்து மட்டத்திலும் தயார்படுத்துவது பற்றியும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தமாத இறுதியில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் கூட்டணி குறித்தும், பிரசார திட்டங்கள் குறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதைத்தொடர்ந்து பிரசார பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இனிமேல்தான் உண்மையான போட்டி ஆரம்பம்.