முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
முத்தலாக் தடை சட்டம்! போலி நாடகம் போடும் அ.தி.மு.க.! மோடிக்கு இப்படியா பயப்படுவது?

மொத்தமே 15 வாக்குகளில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல் எதிர்ப்பதுபோல் நாடகமாடிவிட்டு வெளிநடப்பு என்ற மசோதாவை நிறைவேற்ற துணைபோகும் தந்திரத்தை அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் நிகழ்த்தியதுதான் இந்த மசோதா வெற்றிபெறுவதற்குக் காரணம் ஆகும்.
மேலும், இந்த அவையில் பங்கேற்காமல் தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளும் விலகியிருந்து செவ்வனே தாங்கள் விரும்பியதை செய்து முடித்திருக்கின்றன. முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் மொத்தம் 29 பேர். இவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலே மசோதா நிறைவேறியிருக்காது. பாசிச சிந்தனை அனைத்து கட்சியிலும் விதைக்கப்பட்டிருக்கின்றது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கின்றது.
இதில் அ.தி.மு.க.வும் ஒன்றுதான். மக்களவையில் ஆதரித்துப்பேசிய அ.தி.மு.க. மாநிலங்களவையும் எதிர்த்துப் பேசியது. ஆனால், புத்திசாலித்தனமாக வெளிநடப்பு செய்து முத்தலாக் சட்டம் நிறைவேற துணை நின்றுவிட்டது.
வெளிப்படையாக எதிர்ப்பது சரி, அதேபோல் வெளிப்படையாக ஆதரிப்பதும் நல்லதே. ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் போல் பேசிக்கொண்டு, முதுகில் குத்துவது நல்ல அரசியல் கிடையாது. ஆனால், அ.தி.மு.க. அதைத்தான் செய்திருக்கிறது. மோடிக்கு பயந்து நடுங்குவதைவிட, அ.தி.மு.க.வை பா.ஜ.க.வில் இணைத்துவிடலாம்.