2 மாம்பழங்களும் பின்னே விந்தியாவும்! ஜெயலலிதாவுடன் ஒரு செம் பிளாஷ்பேக்!

ஜெயலலிதா சமாதியில் நடிகை விந்தியா ஒரு கூடை மாம்பழம் வைத்து அஞ்சலி செலுத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை விந்தியா, ஜெயலலிதாவின் தீவிர ரசிகை ஆவார். இதன் அடிப்படையிலேயே அஇஅதிமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்ட விந்தியா, ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். இந்நிலையில், ஜெயலலிதா இறந்து, 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், திடீரென வியாழனன்று மெரினா கடற்கரைக்கு விந்தியா வந்தார்.

கையோடு ஒரு கூடை மாம்பழம் கொண்டுவந்த அவர், அதனை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலருக்கும் இந்த விசயம் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இதுபற்றி பின்னர் ஊடகத்தினரிடம் விந்தியா விளக்கம் அளித்தார். அதாவது, விந்தியாவுக்குச் சொந்தமாக, ஆந்திர மாநிலம், சந்திரகிரியில் மாம்பழ தோட்டம் உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும், ஆண்டுதோறும் இங்கு விளையும் மாம்பழங்களை விந்தியா அனுப்பி வைப்பாராம்.

அந்த மாம்பழங்களை ருசித்து சாப்பிட்டுவிட்டு, அதன் சுவை பற்றி ஜெயலலிதா பாராட்டுவது உண்டாம். இந்நிலையில், ஜெயலலிதா இறந்துவிட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக, தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை கூடையில் எடுத்து வந்து, ஜெயலலிதா சமாதியில் படையலாக வைத்து வழிபட்டுச் செல்வதாக, விந்தியா தெரிவித்துள்ளார். 

''அம்மா உயிரோடு இருந்திருந்தால், இந்த மாம்பழங்களை ஆசை ஆசையாக சாப்பிடுவாங்களே,'' என்று கண்ணீர் மல்க விந்தியா குறிப்பிட்டார். இதுதான், இந்த மாம்பழ அஞ்சலியின் பின்னணியில் உள்ள விசயம். அதிமுக.,வினரே ஜெயலலிதாவை மறக்க தொடங்கிவிட்ட நிலையில், விந்தியாவின் செயல்பாடு அங்கிருந்த பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.