பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! முன்னணி ஹீரோக்கள் மீது சந்தேகம் எழுப்பும் வரலட்சுமி!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் போன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க, உச்ச நடிகர்கள் தங்களுக்கான பலத்தை பயன்படுத்த வேண்டும் என வரலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழகத்தையே நடுநடுங்க வைத்த ஒரு வழக்காக பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தற்போது உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தொடங்கி அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இச்சம்பவம் குறித்து பேசியுள்ள நடிகை வரலட்சுமி, பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், பயம் இன்றி வெளிப்படையாக புகார் அளிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண்கள் தங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். இச்சம்பவத்தில் மிகப் பெரிய நடிகர்கள் சிலர் கருத்துக்களை சொல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ள வரலட்சுமி, மிகப்பெரிய சக்திகளுக்கு மிகப்பெரிய பொறுப்புடைமை உண்டு என்று கூறியுள்ளார்.

மீடூ இயக்கத்தின் போது கூட ஒரு சில நடிகர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அது போல் அல்லாமல், தங்களுக்கான பலத்தை பெரிய நடிகர்கள் பயன்படுத்த வேண்டும் என்று வரலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

இதை அவர்கள் செய்யாவிட்டால், என்றாவது ஒருநாள் அவர்கள் வீட்டிலும் நடக்கக் கூடும் என்றும் வரலட்சுமி கூறியுள்ளார்.