சிகரெட் அடிப்பதை நிறுத்தியது எப்படி? பிரபல நடிகை வெளியிட்ட துணிச்சல் தகவல்!

மும்பை: புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்று நடிகை சுமோனா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.


31 வயதாகும் சுமோனா சக்ரவர்த்தி, இந்தி சீரியல்கள் மற்றும் சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவர், தி கபில் சர்மா ஷோ என்ற டிவி நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றார். இதன்போது, தனக்கு நீண்ட நாட்களாக புகைப்பழக்கம் இருந்தது என்றும், அதனை தற்போது கைவிட்டுவிட்டதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக சிகரெட்டை தொடவே இல்லை என்றும் சுமோனா சக்ரவர்த்தி கூறியுள்ளார். 

''நண்பர் ஒருவரின் பிறந்த நாளன்று இந்த சபதத்தை மேற்கொண்டேன். அன்று முதல் நிக்கோடின் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் கைவிட்டுவிட்டேன். அதேபோல, கடந்த 2 ஆண்டுகளாக, புகைப் பொருட்களை தொடாமல் வாழ்ந்து வருகிறேன். முதலில் மனதை கட்டுப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.

தற்போது எனது உடலே புகையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அளவுக்கு மாறிவிட்டேன். எதுவாக இருந்தாலும் முதலில் நமது மனதை பழக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின், எதையும் நம்மால் செய்ய முடியும். நான் ஒரு நடிகை என்பதால், என்னை பார்த்து பலரும் புகைப்பழக்கத்தை கை விட நேரிடலாம்.

அதற்காகவே இந்த தகவலை வெளியில் சொல்கிறேன். புகைப்பழக்கத்தை கைவிடுவது எல்லோருக்கும் நல்லது. அதைச் செய்ய நம்மால் முடியும். அதற்கு நானே நல்ல உதாரணம்,'' என்று சமோனா சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.