சர்காரால் ஜீரோவான தளபதி “விஜய்” - துக்ளக்கால் ஹீரோவான “சோ” !

திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் பத்து பேர் கூடி பேனர்களை கிழித்த உடன் சர்கார் படத்தில் காட்சிகளை நீக்கி திரையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹீரோவான விஜய் ஹீரோவாகிவிட்டார் என்கிறார்கள் வரலாறு தெரிந்தவர்கள்.


கடந்த 1970ம் ஆண்டுவாக்கில் சோ முகமது பின் துக்ளக் என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை துவக்கினார். அது தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த காலகட்டம். மேலும் அப்போதைய கலைஞர் கருணாநிதி ஆட்சியை துக்ளக் தர்பார் என்று சோ கடுமையாக விமர்சித்து வந்ததும் உண்டு. இந்த சமயத்தில் தான் முகமது பின் துக்ளக் என்கிற பெயரில் படத்தை துவக்கினார் சோ.




   ஆனால் அந்த படத்தை சோ எடுத்துவிடவே கூடாது என்று தி.மு.க மேலிடத்தில் இருந்து உத்தரவு. இதனை அடுத்து படத்தின் முக்கிய நடிகர், நடிகைகள் விலகினர். ஆனாலும் சோ விடவில்லை, புதுமுகங்களை வைத்து துக்ளக் படத்தை எடுத்து முடித்தார். முழுக்க முழுக்க அரசயில் நய்யாண்டியை கொண்டு எடுக்கப்பட்ட துக்ளக் படத்திற்கு சென்சாரிலும் ஏகப்பட்ட பிரச்சனை. தீர்ப்பாயத்திற்கு சென்று தான் துக்ளக் படத்திற்கு சோவால் தணிக்கை சான்று பெற முடிந்தது.

  ஆனாலும் கூட ஏராளமான காட்சிகளை சென்சார் வெட்டி வீசியிருந்தது. அப்படி இருந்தும் கூட தி.மு.கவினர் தொடர்ந்து துக்ளக் படத்திற்கு எதிராகவே இருந்தனர். துக்ளக் படத்தை வாங்க கூடாது என்று விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டனர். திரையரங்க உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். ஆனாலும் கூட ஒரு சில திரையரங்குகள் துக்ளக் படத்தை திரையிட்டன.

   அந்த படத்தை பார்க்கச் சென்ற சோவை தி.மு.கவினர் ஒன்று கூடி அவமானப்படுத்தினர். மேலும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டினர். காட்சிகளை நீக்கினால் பிரச்சனை செய்யமாட்டோம் என்று கூறினர். ஆனால் தன் படத்தில் எந்த காட்சியும் இனி நீக்கப்படாது என்று சோ உறுதியாக இருந்தார். இதனால் துக்ளக் படம் குறைந்த நாட்களே ஓடி பெட்டிக்குள் முடங்கியது.

   ஆனால் தற்போது கூட ஆன்லைனிலும், டி.விடி வடிவிலும் முழுமையாக துக்ளக் படம் கிடைக்கிறது. இதே போன்றதொரு நிலைமை கூட சர்கார் படத்திற்கு வரவில்லை. படம் வெளியான பிறகு திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே மிரட்டப்பட்டனர். அவர்கள் காட்சிகளை நீக்குங்கள் என்று கூறியதும் கிளிப்பிள்ளை போல் கேட்டுக் கொண்டு காட்சிகளை சர்காரில் நீக்கிவிட்டனர்.



   இத்தனைக்கும் சோ சன் பிக்சர்ஸ் – விஜய் போல் அப்போது பெரிய கோடீஸ்வரன் இல்லை. துக்ளக் படத்தை சொந்தமாக எடுத்து பெரிய அளவில் நஷ்டத்தை தான் சந்தித்தார். ஆனாலும் கூட தனது தன்மானத்தை இழந்து துக்ளக் படம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று அவர் எண்ணவில்லை. ஒரு பத்திரிகையாளராக இருந்து தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் துக்ளக் விவகாரத்தில் நடந்து கொண்டார்.

   ஆனால் திரைப்படங்களில் வீர வசனம் பேசும் விஜய் தனது பெயருக்கு முன்னால் தளபதி என்கிற பட்டத்தை வேறு போட்டுக் கொள்கிறார். ஆனால் படத்தை திரையிடமாட்டோம் என்கிற ஒரே மிரட்டலுக்கு பயந்து காட்சிகளை நீக்க சம்மதிக்கிறார். அப்படி இருக்கையில் விஜய் எப்படி ஹீரோ அவர் ஜீரோ தானே? அதே சமயம் சோவை எப்படி காமெடியன் என்று கூற முடியும் உண்மையில் அவர் தானே ஹீரோ?