உண்மை சொன்ன மணிகண்டனுக்கு பதவிபறிப்பு சரி, உடுமலை ராதாகிருஷ்ணன் மீது என்ன நடவடிக்கை..?

ஜெயலலிதா போலவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஆளாளுக்குப் புளகாகிதம் அடைகிறார்கள். ஆனால், எடப்பாடியின் நடவடிக்கையே தவறு என்று அ.தி.மு.க.வினர் டென்ஷன் ஆகிறார்கள்.


ஏனென்றால், இதுவரை ஐ.டி. துறையின் கீழ் இருந்த கேபிள் டி.வி. நிர்வாகத்தைத்தான் பிரித்து உடுமலை ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார் எடப்பாடியார். அதனால் மணிகண்டன் கோபத்தில் இருந்ததாகவும், இதுகுறித்து பேசுவதற்கு எடப்பாடியை மணிகண்டன் தொடர்புகொள்ள முயன்றும் தோற்றுப்போனதாக சொல்லப்படுகிறது.

அதனாலே வேறு வழியின்றி உடுமலை ராதாகிருஷ்ணன் பற்றிய உண்மையான ரகசியத்தை பொதுவெளியில் போட்டு உடைத்தார்.  உடுமலை ராதாகிருஷ்ணன் இரண்டு லட்சம் கேபிள் கனெக்‌ஷன் உள்ள அக்ஷயா என்று தனியார் நிறுவனத்தை நடத்துகிறார். இதனை அரசு கேபிளில் இணைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

அதேபோன்று அரசு கேபிளுக்கு செட்டப் பாக்ஸ் வழங்கும் நிறுவனத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணனே நடத்துவதாக சொன்னார். இது மக்கள் யாரும் அறியாத புதிய தகவல். உண்மையைச் சொல்வது என்றால் நல்ல காரியம்தான் செய்திருக்கிறார் மணிகண்டன்.

அ.தி.மு.க. ஊழல் குறித்து வெளியே பேசக்கூடாது என்றும், அதனால்தான் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நடவடிக்கை சரி என்றால், அரசுக்கு  நஷ்டம் உருவாக்கும் வகையில் செயல்படும் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?

இதனை எடப்பாடியார் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவசரம் சாரே...