தொடரும் தீண்டாமை! தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற தலித் மாணவன்!

ஜாதி பாகுபாடு காரணமாக, கிராம மக்கள் உதவ மறுத்த நிலையில், தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து தனியாளாக அவரது மகன் தள்ளிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மனிதன் நவீனமாக மாறி வரும் இதே உலகில்தான் ஜாதியின் பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களும் தொடர்கின்றன. காலங்கள் மாறினாலும், ஜாதிக் கொடுமைகள் மாறாது என்பதற்கு உதாரணமாக, ஒடிசாவில் 

இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 17 வயது. ஒடிசாவின் கர்பபாஹல் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் என்ற அந்த இளைஞனின் தாய் சின்ஹானியா (45). இவர், தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராவிதமாக, தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே,சரோஜின் தந்தையும் இறந்துவிட்டார்.

 

இந்நிலையில், தாயும் இறந்ததால், சரோஜ் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளான். ஆனால், உள்ளூர் மக்கள், கல் நெஞ்சத்துடன், அவர்களை தாழ்ந்த ஜாதி எனக் கூறி, இறுதிச் சடங்கு செய்ய மறுத்துவிட்டனர். யார் உதவியும் இல்லாத நிலையில், மிகுந்த வேதனையுடன், தனி ஆளாக, தனது தாயின் சடலத்தை ஒரு சைக்கிளில் வைத்து, சரோஜ் சுடுகாட்டிற்கு தள்ளிச் சென்றுள்ளார்.

 

5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, சைக்கிளில் தள்ளிச்சென்று, தாயின் சடலத்திற்கு, தனியாளாகவே, இறுதிச் சடங்குகள் செய்து, புதைத்தும் உள்ளார். எனினும், அவர் சுடுகாட்டில் தனது தாயின் சடலத்தை

புதைக்காமல், வனப்பகுதியில் புதைத்துவிட்டதாக, சர்ச்சை கிளம்பியுள்ளது. 

 

இதற்கிடையே, இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.