புதுமணத் தம்பதி காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி! ஷாக்கடிக்க வைக்கும் காரணம்!

திருப்பூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட நிர்வாகி தனது மனைவியுடன் காவல்நிலைய வாசலில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் சதீஷ்குமார். இவரது மனைவி சாதனா. இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் தான் ஆகிறது.

சதீஷ்குமார் தனது மனைவி சாதனாவுடன் திருப்பூர் சொர்ணபுரி லே அவுட்டில், தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். சதீஷ்குமாருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சதீஷ்குமாரை, தியாகராஜன் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். உடடினயாக வீட்டை காலி செய்து விட்டு சதீஷ்குமார் தனது புதிய வீட்டிற்குள் சென்றுள்ளார். வீட்டில் பொருட்களை வைக்க ஏற்பாடு செய்துவிட்டு எஞ்சிய பொருட்களை எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் சதீஷ்குமாரும் அவரது மனைவி சாதனாவும் ஆசை ஆசையாக வளர்த்த நாய் ஒன்றையும் பழைய வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மாலை ஊரிலிருந்த திரும்பி வந்த சதீஷ்குமார் அங்கு தனது நாய் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் சதீஷ்குமாரின் நாயை வீட்டின் உரிமையாளர் தியாகராஜன் அடித்து விரட்டிவிட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த சதீஷ்குமார் தனது நாயை கண்டுபிடித்து தரவும், தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் காணாமல் போன நாயை கண்டுபிடிப்பது தங்கள் வேலை இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த சதீஷ் மற்றும் சாதனா வீட்டிற்கு சென்று கையோடு மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்துள்ளனர்.

அத்துடன் தங்கள் நாயை கண்டுபிடித்து தரக்கூறி காவல் நிலையம் முன்பே தலையில் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக சதீஷ் மற்றும் சாதனாவை தடுத்து கேனை பறித்தனர்.

ஆனாலும் தொடர்ந்து அவர்கள் மல்லுக்கட்டியதால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. பிறகு காவல் நிலைய வாசலிலேயே அமர்ந்து தங்கள் நாயை கண்டுபிடித்து தரக்கோரி அவர்கள் இருவரும் கண்ணீர் மல்க போராட்டம் நடத்தினர்.  பிறகு காவல்நிலையம் உள்ளே அழைத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து சதீஷ் தனது மனைவி சாதனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.